2016-08-09 15:58:00

ஹுரோஷிமா, நாகசாகி நினைவு நாளுக்கு திருப்பீடம் செய்தி


ஆக.09,2016. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதன் 71ம் ஆண்டு நிறைவு நாள்களுக்கு, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை செய்தி ஒன்றை வழங்கியுள்ளது.

இந்நினைவு நாள்களில் கலந்துகொண்டு பேசிய, நீதி மற்றும் அமைதி அவையின் அதிகாரி இயேசு சபை அருள்பணி Michael Czerny அவர்கள், மன்னிப்பு மற்றும் குணப்படுத்தல் உணர்வோடு, ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வில், இறையன்பை அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, நம் வாழ்வின் பாவம் நிறைந்த மற்றும் துன்ப நேரங்களை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பது நாம் சோர்ந்து போவதற்காக அல்ல, ஆனால், அது, கடவுளின் அருளன்பை, நம் வாழ்வில் அனுமதிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார் அருள்பணி Czerny.

38 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 6ம் தேதி, நம்மைவிட்டுப் பிரிந்த அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இனிமேல் ஒருபோதும் போரே வேண்டாம் என, மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்துவோம் என்றும் கேட்டுக்கொண்டார் அருள்பணி Czerny.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டன.

மேலும், ஜப்பான் ஆயர் பேரவை, ஆகஸ்ட 6ம் தேதி முதல், 15ம் தேதி வரையுள்ள நாள்களை, “அமைதியின் பத்து நாள்கள்” என்று அறிவித்து, அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 35வது ஆண்டாக, இவ்வாண்டு இதனைக் கடைப்பிடித்து வருகின்றது தலத்திருஅவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.