2016-08-10 16:25:00

இந்தியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் இறையடியார்


ஆக.10,2016. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புனிதராக உயரத்தப்படுவதற்குத் தேவையான தன் பயணத்தைக் துவங்கியிருப்பது, கடவுளின் கருணையால் நிகழ்ந்த ஒரு செயல் என்று ராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்ஃபோர் டோப்போ அவர்கள் கூறினார்.

இந்தியாவின் சோட்டா நாக்பூர் பகுதியின் பழங்குடியினத்தைச் சேர்ந்த அருள் சகோதரி மேரி பெர்னதெத் கிஸ்போட்டா பிரசாத் அவர்கள், புனித அன்னம்மாள் புதல்வியர் என்ற துறவு சபையை நிறுவியவர்.

இந்த அருள் சகோதரியை புனிதராக்கும் முயற்சிகளைத் துவங்க, திருப்பீடம் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, அருள் சகோதரியை இறையடியார் என்று, ராஞ்சி கர்தினால் டோப்போ அவர்கள், இத்திங்களன்று அறிவித்த திருப்பலியில், பழங்குடி மக்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வரம் இது என்று குறிப்பிட்டார்.

அருள்சகோதரி மேரி பெர்னதெத் அவர்களை புனிதராக உயரத்துவதற்குத் தேவையான வழிமுறைகளைத் துவக்கக் கோரி, ஜார்கண்ட், மற்றும் அந்தமான் பகுதிகளில் பணியாற்றும் 9 ஆயர்கள், கர்தினால் டோப்போ அவர்களுடன் இணைந்து, கடந்த நவம்பர் மாதம், வத்திக்கானுக்கு விண்ணப்பத்தினர் என்று, ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

1878ம் ஆண்டு பிறந்த மேரி பெர்னதெத் அவர்கள், வேறு மூன்று இளம்பெண்களுடன் இணைந்து, 1897ம் ஆண்டு,  புனித அன்னம்மாள் புதல்வியர் துறவு சபையை நிறுவினார்.

சோட்டா நாக்பூர் பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களுக்கு கல்வி கற்பிப்பதை இத்துறவு சபையின் சகோதரிகள் தங்கள் தலையாயப் பணியாக மேற்கொண்டனர் என்று ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.

சபையை நிறுவிய நால்வரில் இருவர், 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்பகுதியைத் தாக்கிய காலரா கொள்ளை நோயில் இறந்தபோதிலும், அருள்சகோதரி மேரி பெர்னதெத் அவர்கள், தன் பணிகளைத் தொடர்ந்து, 1961ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி, தன் 83வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.