2016-08-11 16:13:00

அருள்பணியாளர் Hamel நினைவாக, 1000 இளையோரின் பயிற்சி


ஆக.11,2016. ஜூலை மாத இறுதியில் பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட கத்தோலிக்க அருள் பணியாளரின் நினைவாக, Aid to the Church in Need என்ற பிறரன்பின் இத்தாலிய கிளை, புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

ஜூலை 26ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட 84 வயது நிறைந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்களின் நினைவாக, 1000 இளையோரின் அருள் பணியாளர் பயிற்சிக்கு Aid to the Church in Need அமைப்பு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது.

அச்சுறுத்தும் முறையில் உலகில் பரவி வரும் அடிப்படைவாத போக்கிற்கு ஒரு மாற்றாக, அன்பைப் பறைசாற்றும் அருள் பணியாளர்களை உருவாக்கும் முயற்சியில் தங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதாக இவ்வமைப்பின் இத்தாலியக் கிளை ஒருங்கிணைப்பாளர், Alessandro Monteduro அவர்கள், CNA கத்தோலிக்க செய்தியிடம் தெரிவித்தார்.

ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா என, உலகின் பல பகுதிகளிலும் உள்ள 21 மறைமாவட்டங்களைச் சேர்ந்த இளையோருக்கு, Aid to the Church in Need அமைப்பினர் திரட்டும் நிதி உதவி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வாதம் பரவுவதைத் தடுக்க, பலசமய உரையாடலை வளர்க்கும் முயற்சிகளிலும் Aid to the Church in Need அமைப்பினர் ஈடுபட திட்டமிட்டு வருவதாக, Monteduro அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.