2016-08-15 15:40:00

பாகிஸ்தான் தேவ நிந்தனை தடைச் சட்டம் குறித்த அமெரிக்க அறிக்கை


ஆக.15,2016. உலக மத விடுதலை பற்றிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் அண்மை அறிக்கையில், பாகிஸ்தானின் தேவ நிந்தனை தடைச் சட்டம் குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உலகில் மத சுதந்திரம் குறித்து அதிகாராப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தேவ நிந்தனைச் சட்டத்தை தங்கள் கையிலெடுத்து  செயல்படும் வன்முறைக் கும்பலால், 1990ம் ஆண்டிலிருந்து 62 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறது.

2013ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 359 பேருக்கு எதிராக 39 தேவ நிந்தனை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கிறது அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிக்கை. பாகிஸ்தானில் தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் 40க்கும் மேற்பட்டோர் மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், இதில் பெரும்பான்மையினோர் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, World Watch என்ற மனித உரிமைகள் அமைப்பின் இவ்வாண்டு அறிக்கையின்படி, கிறிஸ்தவர்கள் அதிகமாக சித்ரவதைகளை அனுபவிக்கும் நாடுகளுள், பாகிஸ்தான், ஆறாவது இடத்தை வகிக்கின்றது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.