2016-08-16 15:34:00

தென் சூடானில் வன்முறையை நிறுத்த உலகளாவிய உதவி தேவை


ஆக.16,2016. தென் சூடானில், வன்முறையை முற்றிலும் நிறுத்துவதற்கு, உலகளாவிய சமுதாயத்தின் தலையீடு அவசியம் என்று, உகாண்டா நாட்டுப் பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தென் சூடானில், மீண்டும் முழுமையான அமைதி திரும்பவும், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ மற்றும் பிற நிவாரண உதவிகள் சென்றடையவும், உலக சமுதாயம், தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, அத்தலைவர்கள் கேட்டுள்ளனர்.

உகாண்டா நாட்டின் Acholi மாநிலச் சமயத் தலைவர்களைக்கொண்ட ARLPI என்ற அமைதிக் குழு வெளியிட்ட இந்த விண்ணப்ப அறிக்கையை, அதன் தலைவராகிய பேராயர் John Baptist Odama அவர்கள், இத்திங்களன்று வாசித்தார்.

தென் சூடானின் அண்டை நாடு என்ற முறையில் இந்த அழைப்பை முன்வைப்பதாகவும், தென் சூடானில், அண்மையில் இடம்பெற்ற வன்முறையில், பல அப்பாவி மக்கள் இறந்துள்ளனர், மற்றும் பலர் புலம்பெயர்ந்துள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.  

வட உகாண்டாவில் இடம்பெற்ற மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் 1997ம் ஆண்டில், ARLPI பல்சமயக் குழு உருவாக்கப்பட்டது. இதில், கத்தோலிக்க, ஆங்லிக்கன், முஸ்லிம் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆதாரம் : CISA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.