2016-08-19 15:58:00

உலக மனிதாபிமான நாள் ஆகஸ்ட் 19


ஆக.19,2016. இன்றைய உலகின் மனிதாபிமானப் பேரிடருக்கானத் தீர்வு எளிதானதோ அல்லது விரைவில் தீர்க்கப்படக்கூடியதோ அல்ல எனினும், இப்பேரிடரை எதிர்கொள்ளும் மக்கள்மீது, ஒவ்வொரு நாளும் பரிவன்பை நம்மால் காட்ட இயலும் என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

உலகில், 13 கோடி மக்களின் வாழ்வு, மனிதாபிமான உதவியைச் சார்ந்துள்ளது என்றும், இவ்வெண்ணிக்கை உண்மையிலேயே அச்சுறுத்துகின்றது என்றும், நம்மைப் போன்ற இம்மக்கள், ஒவ்வொரு நாளும் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார் பான் கி மூன்.

ஆகஸ்ட் 19, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனிதாபிமான நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன். இவ்வாண்டில், இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற, முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஒன்பதாயிரம் பிரதிநிதிகள், போர்கள் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றுவதற்கு உறுதி எடுத்ததையும், தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன். 

2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதியன்று, ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஐ.நா. தலைமை அலுவலகம், குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டது. அந்நாளை, உலக மனிதாபிமான தினமாக அறிவித்து, கடைப்பிடித்து வருகிறது ஐ.நா. நிறுவனம்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.