2016-08-22 16:00:00

வாரம் ஓர் அலசல் – மனிதம் மீட்கப்பட...


ஆக.22,2016. அன்பு இதயங்களே, 31வது கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ரியோவில், வண்ணமயமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்துள்ளன. நட்சத்திரங்களின் அணிவகுப்பில், இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (Sakshi Malik), மூவர்ணக் கொடி ஏந்திச் சென்றார். இதில், 207 நாடுகளைச் சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 15 விளையாட்டுப் போட்டிகளில், 118 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, நாடு திரும்பிய 21 வயதான பி.வி.சிந்துவுக்கு, இத்திங்களன்று ஐதராபாத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருக்கு, ரொக்கமாக 11 கோடி ரூபாய், அரசுவேலை, வீடு, கார் என, பரிசுகள் குவிந்து வருகின்றன. அன்பர்களே, உலக அளவில், ஒலிம்பிக்கிலும், மற்ற துறைகளிலும் சாதனைகள் படைத்துவரும் சிலரின் ஆரம்ப வாழ்க்கை ஓஹோ என்று இருக்கவில்லை. இந்த ரியோ ஒலிம்பிக்கில் 9 தங்கங்களுடன், ஒலிம்பிக்கிலிருந்து விடை பெற்றுள்ள 29 வயது இளைஞர் உசேன் போல்ட் (Usain Bolt) அவர்களின் ஆரம்ப வாழ்வே இதற்கு ஒரு சான்று. மதிய உணவிற்காக ஓடத் தொடங்கிய தங்க மகன் உசைன் போல்ட் என்ற தலைப்பில், ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஜமைக்காவில் பிறந்த தடகள ஓட்ட வீரர் உசைன் போல்ட் அவர்களின், விரைவோட்ட சாதனைகள், இவருக்கு 'மின்னல் வேக போல்ட்' என்ற ஊடகப் புனைப்பெயரையும் பெற்றுத் தந்துள்ளன. இவரின் சிறு வயது வாழ்க்கை, வெறும் சுவாரசிய கதை மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு வெற்றிக்கான உந்துதலையும், ஆர்வத்தையும், சோர்வடையாத மனஉறுதியையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

உசேன் போல்ட் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஓட்டம்தான். ஒருநாள் சிறுவன் உசைன், பள்ளிக்கு மதிய உணவை எடுத்துச் செல்ல மறந்து, அதை எடுப்பதற்காக ஓடினார். வழியில் நாய் ஒன்று இவரைத் துரத்தியது. பள்ளிக்குத் திரும்பி வந்த வழியில், கால்பந்து மைதானத்தில், வெளியே வந்த பந்தை உதைத்து உள்ளே தள்ளிவிட்டுத் தொடர்ந்து ஓடினார். பின்னர் விளையாட்டு பயிற்சியாளர் மீதும் மோதிவிட்டு, அவர் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னரே மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.  பயிற்சியாளர்க்கு உசைன்மீது ஒரு கண். அன்று மதிய உணவு நேரம். உசைனுக்கு சாப்பிட உணவு இல்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. அச்சமயம் பயிற்சியாளர் தனது உணவு பொட்டலத்தோடு அங்குச் சாப்பிட வந்தார். பசியால் வாடியிருந்த உசேனைக் கண்டு, அருகில் சென்று இந்த உணவு உனக்கு வேண்டுமா என்று கேட்டார் பயிற்சியாளர். ஆம் என்று உசேன் சொல்ல, உனக்கு எனது உணவு வேண்டுமென்றால், நீ இந்த ஓட்டப்பந்தய வீரரோடு ஓடி அவரை வெல்ல வேண்டும் என்றார் பயிற்சியாளர். உசைனும் அதற்கு ஒத்துக்கொண்டு ஓடினார். ஆனால் சிறுவன் உசேனுக்கு அந்த வீரரை முந்த முடியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி பயிற்சியாளரைப் பார்த்தார் சிறுவன். அவர் தனது உணவைக் காட்டினார். அதனால் வெறியோடு மீண்டும் வேகமாக ஓடி, அந்த வீரரை முந்தி விட்டார் உசேன். அன்று வயிற்றுப் பசிக்காக ஓட ஆரம்பித்த சிறுவன் உசேன், இந்த ரியோ ஒலிம்பிக் வரை ஓடி, சாதனை படைத்துள்ளார்.

மின்னல் வேக மனிதர், உலகின் அதிவேக மனிதர் என்றெல்லாம் போற்றப்படும் உசைன், இதற்குமுன், ஒலிம்பிக்கில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இவர், தான் உயர வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தனது நாடும் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்ந்து வரும் நாட்டுப் பற்றாளர். இவர் தன்னைத் தேடி வரும் பன்னாட்டு விளம்பர நிறுவனங்களிடம், ஜமைக்கா நாட்டில் விளம்பரப் படப்பிடிப்புக்களை எடுக்க வேண்டும், அதோடு, அதற்குத் தேவையான கருவிகள் தங்களிடம் இருந்தாலும், ஜமைக்கா நாட்டு நிறுவனங்களில்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும், இதற்கு உடன்பட்டால், அதில் தான் நடிக்கத் தயார் என்ற நிபந்தனை விதிக்கிறாராம். இதனால், 100 முதல் 200 இளையோரக்கு வேலை கிடைக்கும் என்றும், ஜமைக்கா நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றும் நம்புகிறாராம் உசேன். மேலும், இவர் நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வழியாக, பள்ளிகளுக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுப்பது, பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவது போன்ற நற்பணிகளையும் ஆற்றி வருகிறாராம் உசேன் போல்ட். இவ்வாறு, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அன்பர்களே, உசேன் அவர்கள் பிறந்த ஜமைக்கா, கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு நாடாகும். 1494ம் ஆண்டு முதல், 1655ம் ஆண்டுவரை இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலும், அதன்பின்னர் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திலும் இருந்த நாடு இது. இந்நாட்டில் கரும்பு வயல்களில் வேலை செய்வதற்கு, மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகள் பெருமளவாகக் கொண்டு வரப்பட்டனர். 1673ம் ஆண்டில் 9,504 ஆக இருந்த அடிமைகளின் எண்ணிக்கை, 1775ம் ஆண்டில், 1,92,787 ஆக உயர்ந்தது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டுமென்று இங்கிலாந்தில் இயக்கங்கள் குரல் எழுப்பியதையடுத்து, 1807ம் ஆண்டில், ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் இரத்து செய்தது. பின்னர், 1838ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று, பிரித்தானிய காலனி நாடுகளில், ஆப்ரிக்க அடிமைகள், கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தைப் பெற்றனர். எனவே தற்போதைய ஜமைக்காவில், ஆப்ரிக்க அடிமைகளின் வாரிசுகளே பெருமளவாக உள்ளனர். உசேன் போல்ட் அவர்களும், ஆப்ரிக்க அடிமைகளின் வாரிசேயாவார்.

அன்பு நெஞ்சங்களே, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடைபெற்ற ஆப்ரிக்க அடிமை வர்த்தகம் மற்றும் அது இரத்து செய்யப்பட்டதை நினைவுகூரும் உலக நாளை, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 23ம் தேதியன்று கடைப்பிடித்து வருகிறது. 1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22க்கும், 23ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், தற்போதைய ஹெய்ட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசு நாடுகளில், அதாவது அப்போதைய சாந்தோ தொமிங்கோ தீவில், மனித அடிமை வர்த்தகத்திற்கு எதிராக எழுந்த பெரும் புரட்சியின் நினைவாக, இந்த உலக நாள், ஆகஸ்ட் 23ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, கரீபியன் இவற்றுக்கிடையே, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக, ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நடைபெற்ற மனித வர்த்தகத்திற்கு, ஒரு கோடியே 50 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறாரும் பலியானார்கள். இது மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மனித வர்த்தகம், நாம் வாழும் இக்காலத்திலும், நவீன முறையில் நடத்தப்படுகின்றது. பாலியல் தொழில், பாலியல் அடிமை, கட்டாயத் திருமணம், கட்டாயத் தொழில், ஆயுத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது என, பலவகையான அடிமைமுறைகள் இடம்பெறுகின்றன. இன்றைய உலகில் இரண்டு கோடியே 10 இலட்சம் பேர் இத்தகைய அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது

 

அன்பு இதயங்களே, இலங்கை பற்றி இந்நாள்களில் ஊடகங்களில் வெளிவந்திருக்கும் கொடூரமான ஒரு செய்தி, நமக்கு அச்சத்தை ஊட்டுகின்றது. அகதி முகாம்களில் இருந்தும், புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் தமிழ்ப் போராளிகள்,  இனம் காணமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டு, இதுவரை 103 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனந்த ராஜா என்கிற ஓர் இளைஞரின் கடிதம் ஒன்றை, ‘கதிரவன்’என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. `நான் அநுராதபுரம் சிறையில் இருந்தபோது, எனக்கு ஓர் ஊசி போட்டார்கள். அதில் இருந்தே எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுவிட்டன' என, அவர் அதில் கூறியுள்ளார். மேலும், எஸ்.என்.தேவன் என்பவர் இவ்வாறு சொல்லியிருப்பதாக, விகடன் இதழில் ஒரு செய்தி இருந்தது.

`2009-ம் ஆண்டு மே மாதம், இராணுவத்தினரிடம் நான் சரண் அடைந்தேன். மூன்று மாதங்கள் ஒரு முகாமில் வைத்திருந்தார்கள். அதன்பிறகு வேறு ஒரு முகாமுக்கு மாற்றினார்கள். அந்த முகாமில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் `தடுப்பூசி' எனச் சொல்லி ஓர் ஊசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினார்கள். அந்த ஊசி போட்டதும் பலருக்கு மயக்கம் வந்துவிட்டது. மயங்கி விழுந்தவர்களை எல்லாம் மருத்துவ வாகனத்தில் கொண்டு போனார்கள். ‘எதுக்காக இந்த ஊசி போடுறீங்க?’ எனக் கேட்டபோது ‘பறவைக் காய்ச்சல் பரவுது, அதுக்காகத்தான்' எனச் சொன்னார்கள். இன்னொரு இராணுவ அதிகாரி, `அவங்க எல்லாருக்கும் எய்ட்ஸ் இருக்கு. அதனாலதான் போடுறாங்க’என்றார். ‘இத்தனை பேருக்கா எய்ட்ஸ் இருக்கு?!’ என்றோம். இந்த ஊசி போட்டுக்கிட்ட எல்லாருக்குமே, சில நாள்களில் உடல் சோர்வு வந்தது; உடல் நடுக்கம் ஏற்பட்டது. சிலருக்குப் பார்வை மங்கிவிட்டது. `இந்த ஊசியைப் போட்டுக்க மாட்டோம்'னு சொன்னவங்க எல்லாருக்கும் அடி விழுந்தது. அடிச்சுக் கட்டாயப்படுத்தி ஊசியைப் போட்டாங்க. அந்த ஊசியில் ஏதோ வேதியப்பொருள் கலந்திருக்குமோனு சந்தேகமா இருக்கு. எங்களுக்குக் கொடுத்த உணவிலும் அது மாதிரி ஏதாவது கலந்திருக்கலாம்னு சந்தேகமா இருக்கு. எங்களுக்கு எங்க சொந்தக்காரங்க கொண்டுவந்து கொடுக்கிற உணவைப் பிடுங்கித் திங்கிற இராணுவக்காரங்க, முகாம்ல கொடுக்கிற உணவை ஒரு நாள்கூட வாங்கிச் சாப்பிட்டதே இல்லை. முகாம்ல இருந்து வெளியேறின எல்லாருமே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுறதுக்கு அந்த உணவுதான் காரணம்.

அன்பர்களே, காட்டு அரசன்  சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. அதேபோல், எந்தவொரு விலங்கினமும் சிங்கத்திடம் அடிமையில்லை. ஆனால், மனிதர்தான், பிற மனிதரை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே மனித அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் இந்த உலக நாளில், மனிதரை மனிதர், பொருளாகப் பயன்படுத்தும் மடமை ஒழிய குரல் எழுப்புவோம். அன்பர்களே, முதலில், நாம் நம்முடன் வாழ்வோரின் மனிதத் தன்மையை மதித்து நடப்போம். பிறருக்காய் வாழ்வதும், பிறருக்காய்த் தருவதும் மட்டுமே, மனிதம் என்பதையும்,  ஒருவர், தன்னை, தனது மனிதத்தை எவ்வாறு மதிக்கிறாரோ, அவ்வாறே மற்றவரின் மனிதத்தை மதிப்பார் என்ற உண்மையையும் உணர்ந்து வாழ்வோம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.