2016-08-23 16:11:00

52 ஆண்டுகளாக, ஏழை காச நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை


ஆக.23,2016. பாகிஸ்தானின் லாகூர் உயர்மறைமாவட்டம் நடத்தும் பெத்தானியா மருத்துவமனை, கடந்த 52 ஆண்டுகளாக, ஏழை காச நோயாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றது.

இத்தகைய வசதியைக் கொண்ட ஒரே கத்தோலிக்க மருத்துவமனை சியல்காட் பெத்தானியா மருத்துவமனை என்றும், இதன் பணியாளர்கள், காசநோயை ஒழிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர் என்றும், அம்மருத்துவமனை இயக்குனர் அருள்பணி ராபின் பஷீர் அவர்கள் தெரிவித்தார்.

ஒரு சிறு மருந்தகமாகத் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனையில் தற்போது 134 படுக்கை வசதிகள் உள்ளன என்றும், தினமும், ஏறத்தாழ 200 நோயாளர்கள் அங்கு சிகிச்சைக்கு வருகின்றனர் என்றும், இவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்றும் அருள்பணி பஷீர் அவர்கள் கூறினார்.

18 கோடி மக்களைக் கொண்ட பாகிஸ்தானில், 18 வயதுக்குட்பட்ட 15 ஆயிரம் பேர் உட்பட, ஏறத்தாழ 4,30,000 பேர் காச நோயால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 ஆயிரம் காச நோயாளர்கள் இறக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.