2016-08-24 16:55:00

உக்ரைனில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு


ஆக.24,2016. உக்ரைனில் இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்கள் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் அமைதி நிலவ எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை, அம்மோதல்களில் ஈடுபட்டுள்ள எல்லாத் தரப்பினரும், பன்னாட்டு அமைப்புகளும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், இதில் பங்குபெற்ற 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில், இவ்விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படவும், அவசரகால மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் நாடு, முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்ற 25ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டில் சிறப்பிக்கும்வேளை, அந்நாட்டின் அமைதிக்காகத் தான் தொடர்ந்து செபிப்பதாகவும் உறுதியளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், உலக உலகுசார் துறவு அமைப்புகள் அவையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின்போது வாழ்த்துத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் யூபிலி ஆண்டு, அருள் மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக அமையட்டும் எனவும் வாழ்த்தினார் திருத்தந்தை.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த பொதுப் பேரவை நடைபெறுகின்றது.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.