2016-08-24 17:16:00

கந்தமாலில் பலியானவர்கள் மறைசாட்சிகளாக ஏற்கப்பட வேண்டும்


ஆக.24,2016. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைக்குப் பலியானவர்கள், மறைசாட்சிகள் என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று, பேராயர் ஜான் பார்வா அவர்கள் கூறினார்.

2008ம் ஆண்டில், கந்தமால் மாவட்டத்தில், இந்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களைப் புனிதர்களாக அறிவிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய, கட்டக்-புவனேஸ்வர் பேராயர் பார்வா அவர்கள் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டில் இந்திய கத்தோலிக்கத் திருஅவை ஆகஸ்ட் 30ம் தேதியை,  மறைசாட்சிகள் தினமாக அறிவித்துள்ளது மற்றும் கந்தமாலில் பலியான கிறிஸ்தவர்களைப் புனிதர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.

இந்தியாவில், சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக இடம்பெறும் திட்டமிட்ட மற்றும் கொடூர நடவடிக்கைகளில் இறந்தவர்களை நினைவுகூரும் செப நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனைத்து விசுவாசிகள், நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் பார்வா.  

மேலும், சேதமடைந்த ஆலயங்களுக்கு இழப்பீட்டு நிதி வழங்குவதற்கு, ஒடிசா மாநில அரசு உறுதியளித்துள்ளதாக, ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.