2016-08-27 13:17:00

இது இரக்கத்தின் காலம் - தனித்துண்ணும் தாவரங்களைப் போல்...


உண்ணுதல் என்ற செயல், மனிதர்களாகிய நம் மத்தியில் பசி என்ற அடிப்படை தேவையைத் தீர்க்கும் கடமை மட்டுமல்ல. மாறாக, கூடிவந்து உணவு உண்ணுதல், உறவை வளர்க்கும் ஒரு கருவியாகவும் உள்ளது.

பாவம், தாவரங்கள்... அவை ஒவ்வொன்றும் தனித்து வேரூன்றி நின்ற இடத்திலேயே தினமும் உணவு உண்பது, இயற்கை வகுத்த நியதி. தனித்துண்ணும் தாவரங்களைப் போல் மனிதர்களும் மாறிவரும் நிலை, மனதை நெருடுகிறது. துரிதமாகச் செல்லும் இன்றைய உலகில், காளாண்களைப்போல் வளர்ந்திருக்கும் துரித உணவகங்களில், மனிதர்களாகிய நாம், தாவரங்களைப் போல், நின்றபடியே, அவசர அவசரமாக உணவை விழுங்கும் காட்சிகள் பெருகி வருகின்றன.

இரவும் பகலும் உழைக்கவேண்டியச் சூழலில், சேர்ந்து அமர்ந்து, பேசி, சிரித்து மகிழ்வது, சேர்ந்து உண்பது போன்ற குடும்பக் கடமைகள் மிக மிக அரிதாகி வருகின்றன. ஒரு சில இல்லங்களில் இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்பது, நிகழத்தான் செய்கின்றது. ஆனால், அவர்கள் அப்படி உண்ணும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே உண்கின்றனர் என்பது பரிதாபமான உண்மை.

தாவரங்களைப் போல் தனித்து நின்று துரிதமாக உணவை உண்பது, தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து உண்பது, போன்ற பரிதாபப் பழக்கங்களின் பின் விளைவுகளால், மருத்துவர்களை நாம் சந்திக்கும் நேரம் அதிகமாகி வருகிறது.

குடும்பமாய் சேர்ந்து உண்ணும் அழகிய கடமையைப் புதுப்பிக்க, இரக்கத்தின் காலம் தகுந்ததொரு தருணம்! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.