2016-08-27 16:57:00

இயற்கைப் பேரிடர் அபாய நாடுகளில் இந்தியா 77-வது இடம்


ஆக.27,2016. கடுமையான இயற்கைப் பேரிடர்களால் எளிதாகப் பாதிக்கப்படும் முதல் ஐந்து நாடுகளில் பங்களாதேஷும், 77-வது இடத்தில் இந்தியாவும், 72வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன என்று, “உலகப் பேரிடர் ஆபத்து 2016” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இயற்கைப் பேரிடர் ஏற்படின் அதனை முறையாக நிர்வகித்து மேலாண்மை செய்வதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் மிக மோசமாகத் திகழும் நாடுகளில், 2016-ம் ஆண்டில், வனுவாத்து தீவு முதலிடத்தில் உள்ளது.

ஐ.நா. சுற்றுச்சூழல் மற்றும் மானுட பாதுகாப்பு பல்கலைக்கழகம்(UNU-EHS), “உலக பேரிடர் ஆபத்து 2016” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இயற்கைப் பேரிடர் மற்றும் அதனை கையாளும் விதத்தில் ஏற்படும் சமூக ரீதியான பாதிப்புகள் என்ற அளவில், 171 நாடுகளை இது மதிப்பீடு செய்துள்ளது.

இயற்கைப் பேரிடர் ஏற்படுவதிலிருந்து எந்த நாடும் தப்ப முடியாது, ஆனால், அதனால் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட சேதங்களை தவிர்ப்பதற்கான உள்கட்டமைப்பு, மற்ற வசதிகள், நடைமுறைகள், வலுவான நிர்வாகத் திறமைகளின்மை ஆகியவையால் இயற்கை நிகழ்வைப் பேரிடராக மாற்றிவிடுகிறது என்கிறது இந்த அறிக்கை.

பேரிடர் நிகழ்வதற்கு முன்பாகவே, முன்பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதில், உலக நாடுகள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

உயர்தர உள்கட்டமைப்புகளை நன்றாக நிர்வகிக்கும்போது பேரிடரின் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, வெள்ளம், புயல், பூகம்பம் நிகழ்ந்த பிறகு மனிதாபிமான உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை விரைவில், எளிதில் சென்றடையுமாறு இருக்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார இழப்புகள், மனித இழப்புகளைத் தவிர்க்கலாம்” என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.