2016-08-27 16:00:00

கொல்லப்பட்ட அருள்சகோதரிகள், ஏழைகளுக்கு பணியாற்றியவர்கள்


ஆக.27,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிசிசிப்பியில் கொலைசெய்யப்பட்டுள்ள இரு அருள்சகோதரிகள், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்க்குப் பணியாற்றி வந்தவர்கள் என்று கூறி, இவ்வன்முறைக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Joseph Kurtz.

மேலும், இக்கொலைகள் பற்றி கண்டனம் தெரிவித்துள்ள மில்வாக்கி பேராயர் Jermone Listecki அவர்கள், ஒவ்வொரு வன்முறைச் செயலும், சமூகம் முழுவதையும் பாதிக்கின்றது என்று சொல்லி, தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார்.

Kentucky, நாசரேத் பிறரன்பு சபையின், 68 வயது நிரம்பிய அருள்சகோதரி Paula Merrill, மில்வாக்கி புனித பிரான்சிஸ் பள்ளி சகோதரிகள் சபையின் 68 வயது நிரம்பிய அருள்சகோதரி Margaret Held ஆகிய இருவரும், மிசிசிப்பியில் அவர்கள் வாழ்ந்த இல்லத்தில், இவ்வியாழனன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செவிலியரான இச்சகோதரிகள், மிசிசிப்பியில், ஏழை மக்களைப் பராமரித்து அவர்களுக்கு உதவி செய்து வந்தனர். இவர்கள் பணியாற்றிவந்த மருத்துவமனை மருத்துவர் எலியாஸ் கூறுகையில், இவர்கள் எல்லாராலும் அன்பு செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விரு அருள்சகோதரிகளைக் கொலை செய்தவராக, சந்தேகத்தின்பேரில் 46 வயது நிரம்பிய Rodney Earl Sanders என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.