2016-08-27 13:30:00

பொதுக்காலம் - 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


I              சீராக்கின் ஞானம்  3 : 17-18, 20, 28-29

II            எபிரேயருக்கு எழுதிய திருமுகம்  12 : 18-19, 22-24அ

              லூக்கா நற்செய்தி 14 :  1, 7-14

அனைத்து உயிரினங்களின் அடிப்படை தேவை உணவு. மனிதர்களுக்கும் இது ஓர் அடிப்படை தேவைதான். எனினும், உண்ணுதல் என்ற செயல், நம் மத்தியில் பசி என்ற அடிப்படை தேவையைத் தீர்க்கும் கடமை மட்டுமல்ல. மாறாக, கூடிவந்து உணவு உண்ணுதல், உறவை வளர்க்கும் ஒரு கருவியாகவும் உள்ளது. மிருகங்களும் கூடிவந்து உண்கின்றன. ஆனால், அவ்விதம் கூடிவருவது அவை அறிந்து செய்யும் செயலா என்ற கேள்வி எழுகிறது. மனிதர்கள் மத்தியில் மட்டுமே, குழுவாக கூடிவந்து உண்பது ஒரு சமூகக் கலையாக வளர்ந்துள்ளது.

பாவம், தாவரங்கள்... அவை ஒவ்வொன்றும் தனித்து வேரூன்றி நின்ற இடத்திலேயே தினமும் உணவு உண்பது இயற்கை வகுத்த நியதி. தனித்துண்ணும் தாவரங்களைப் போல் மனிதர்களும் மாறிவரும் நிலை மனதை நெருடுகிறது. துரிதமாகச் செல்லும் இன்றைய உலகில், காளாண்களைப்போல் வளர்ந்திருக்கும் துரித உணவகங்களில், மனிதர்களாகிய நாம், தாவரங்களைப் போல் நின்றபடியே அவசர அவசரமாக உணவை முடிக்கும் காட்சிகள் பெருகி வருகின்றன.

இரவும் பகலும் உழைக்கவேண்டியச் சூழலில், சேர்ந்து அமர்ந்து பேசி, சிரித்து மகிழ்வது, சேர்ந்து உண்பது போன்ற குடும்ப செயல்பாடுகள் மிக மிக அரிதாகி வருகின்றன. ஒரு சில இல்லங்களில் இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்பது நிகழத்தான் செய்கின்றது. ஆனால், அவர்கள் அப்படி உண்ணும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே உண்கின்றனர் என்பது பரிதாபமான உண்மை. தாவரங்களைப் போல் தனித்து நின்று துரிதமாக உணவை உண்பது, தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து உண்பது, போன்ற பரிதாபப் பழக்கங்களின் பின் விளைவுகளால், மருத்துவர்களை நாம் சந்திக்கும் நேரம் அதிகமாகி வருகிறது.

சேர்ந்துண்பதைப்பற்றி பேசும்போது, நாம் கலந்துகொள்ளும் விருந்துகள் பற்றியும் சிந்திக்கலாம். விருந்தென்று வந்துவிட்டால், விருந்து பரிமாறுவதில், விருந்து உண்பதில் எத்தனையோ வழி முறைகள், விதி முறைகள்... ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பழக்கம், வழி முறை உண்டு. பொதுவாகவே, மிகப்பெரும் செலவில், மிக உயர்ந்த முறையில் நடத்தப்படும் விருந்துகளில், உணவு உண்பதை விட, அங்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகள், சாத்திர சம்பிரதாயங்கள் அதிக அளவில் இருக்கும். அந்த விருந்துகளில் எதை எதை எந்தெந்த நேரங்களில் செய்யவேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு விருந்துக்குச் செல்லவேண்டும், இல்லையேல் அவமானப்பட வேண்டியிருக்கும்.

ஓர் அருள் பணியாளர் என்ற முறையில், பல விருந்துகளில் பங்கேற்றுள்ளேன். சாதாரண, எளிய குடும்பங்களில் எந்தவித சடங்கும் இன்றி விருந்து உண்டு, மன நிறைவோடு வந்திருக்கிறேன். வசதிபடைத்தவரின் விருந்துகளில், எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது, எதை எடுப்பது, எத்தனை முறை எடுப்பது என்று கணக்குப் போடுவதிலேயே விருந்தின் பெரும்பகுதி நேரத்தைக் கழித்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் இந்த விருந்துகளிலிருந்து திரும்பியபோது வயிறும் நிறையவில்லை, மனதும் நிறையவில்லை.

விருந்தைப் பற்றி ஏன் இவ்வளவு விளக்கம்? இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப்பற்றி, அந்த விருந்து நேரத்தில் இயேசு சொல்லித்தந்த பாடங்களைப்பற்றி இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஒய்வு நாள் ஒன்றில், இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்... இன்றைய நற்செய்தி இப்படி ஆரம்பமாகிறது. இது சாதாரண விருந்து அல்ல. ஒரு பரிசோதனை விருந்து. இயேசுவைச் சோதிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு விருந்து.

யூத விருந்து முறைகளில் பல சடங்குகள் உண்டு. வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தங்களையே சுத்தமாக்கும் சடங்கு. உள்ளே சென்றதும் ஒருவர் ஒருவரை வாழ்த்தும் சடங்கு... விருந்துக்கு முன், விருந்து நேரத்தில், விருந்து முடிந்ததும்... என்று ஒவ்வொரு நேரத்திற்கும் குறிக்கப்பட்டச் சடங்குகள் பல உண்டு. இயேசு இச்சடங்குகளையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சாத்திர சம்பிரதாயங்கள் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை.

இப்படி சுதந்திரமாக வளர்ந்தவரை, மற்றவர்களையும் அவ்வாறே வளர்க்க நினைத்தவரை, பரிசேயர் தலைவர் ஒருவர் விருந்துண்ண அழைத்திருந்தார். நற்செய்தியில் வரும் அடுத்த வரி, அந்த விருந்தின் உள் நோக்கத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்."

சூழ்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது இயேசுவுக்குப் புதிய அனுபவம் இல்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபோல் நடந்தது. சாதாரண, எளிய மக்கள் இயேசுவை சுற்றி வந்து அவரைக் கூர்ந்து கவனித்தனர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க, அவரது ஒவ்வொரு செயலையும் கண்டு பிரமிக்க, பின்பற்ற மக்கள் எப்போதும் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அந்த எளிய மக்கள் கூர்ந்து கவனித்ததற்கும், இப்போது இந்த பரிசேயர் வீட்டில் இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்ததற்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருந்திருக்கும்.

இப்படி ஒரு சூழலில் நான் இருந்தால் என்ன செய்வேன்? முடிந்தவரை அச்சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதிலேயே என் கவனம் இருக்கும். எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவேன். எவ்வளவு விரைவில் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவில் வெளியேறுவேன்.

இயேசு என்னைப்போன்றவர் இல்லை. அசாத்தியத் துணிச்சல் அவரிடம் இருந்தது. இறைதந்தை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, உண்மை மீது அவருக்கிருந்த பற்று இவற்றின் வெளிப்பாடாக வந்த துணிச்சல் அது. எனவேதான், அந்தப் பரிசேயர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் எழுந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறினார்.

அவரது முதல் கருத்து, விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது கருத்து விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்பதுபோல் தெரியும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையைத் தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச் சொன்னார் இயேசு. இதோ, இயேசு வழங்கிய முதல் பாடம்...

லூக்கா 14: 7-11

விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனை காட்சி ஓடும். நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர் நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்து விடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு நான் அமர்ந்திருக்கிறேன்.

விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத் தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. படபடப்பும் அதிகமாகிறது. வீட்டுத் தலைவர் என்னையும் வந்து வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடம் இருந்து வரவில்லை. என் மனம் உடைந்து போகிறது. கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்தபோது என்னிடம் இருந்த தாழ்ச்சி அர்த்தமில்லாமல் போகிறது. இந்தக் கற்பனைக் காட்சியைச் சிந்திக்கும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்...

இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு, எதிர்பார்ப்போடு கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே இல்லை. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம். உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காண முடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொன்ன பாடம் பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளிய வைத்திருக்கும்.

இயேசுவின் அடுத்த பாடம் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது.

செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் கணக்குகள் நிரம்பி வழியும். யார் யாரை அழைக்கவேண்டும், யார் யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள்... இவ்விதம்... விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும்... என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யார் யாரைச் சந்திப்பது, யார் யாரைக் கண்டும் காணமல் போவது... இவ்விதம் இவர்கள் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.

ஒரு சில விருந்துகளில், மது அதிகமாகி, மதி குறைந்து போகும். பல வேளைகளில் இத்தகைய விருந்துகளில் நிகழும் விபரீதங்களைப் பற்றி கேள்விப்படும்போது, இவர்கள் மனிதப்பிறவிகள்தானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நாளை, ஆகஸ்ட் 29ம் தேதி, திங்களன்று, திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். அவரது தலை வெட்டப்பட்டது, ஒரு விருந்து நேரத்தில். மதுவின் போதையில், ஏரோது மன்னன் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க, அது யோவானின் தலை வெட்டப்படும் அளவுக்கு, அத்துமீறிச் சென்றது. ஒவ்வொரு விருந்துக்கும் சென்றபோதெல்லாம், தன் நெருங்கிய உறவினரான யோவான், ஒரு விருந்து நேரத்தில் கொல்லப்பட்டார் என்ற அந்த வேதனை, இயேசுவின் மனதில் நிழலாடியிருக்கும்.

இப்படிப்பட்ட செயற்கைத்தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற அனைத்து சுவைமிக்க ஆன்ம உணவையும் படைக்கும் இத்தகைய விருந்தைப்பற்றி இயேசு கூறும் வார்த்தைகள், இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

லூக்கா 14: 12-14 

பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.