2016-08-29 15:35:00

சீனாவுடனான உறவுகளில் திருப்பீடம் நம்பிக்கை


ஆக.29,2016. திருப்பீடத்திற்கும், சீனாவுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாவதில் தனக்கு ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலியின் போர்தெனோனே மறைமாவட்ட குருத்துவ கல்லூரியில் ஆற்றிய உரையில், திருப்பீடத்திற்கும், சீனாவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் குறித்த வரலாற்றில், முக்கிய நபரான கர்தினால் Celso Costantini அவர்கள் பற்றியும் கூறினார்.

கர்தினால் Celso Costantini அவர்கள், இத்தூதரக உறவில், பாலம் அமைப்பவராக இருந்தார் என்றும், திருத்தந்தை 11ம் பத்திநாதார் அவர்களால், 1922ம் ஆண்டில் சீனாவுக்கு முதல் திருப்பீடப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்றும், 1933ம் ஆண்டுவரை அவர் அப்பணியில் இருந்தார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.    

சீனாவுடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று, திருப்பீடம் நம்புவதாகவும் கூறினார் கர்தினால் பரோலின்.

சீனாவில் கம்யூனிசம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பணியாற்றிய அருள்பணியாளர் மற்றும் துறவிகள், 1949ம் ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர், 1951ம் ஆண்டில், சீனாவுடனான திருப்பீட உறவுகள் முறிந்தன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.