2016-08-29 13:22:00

வாரம் ஓர் அலசல் – வருமுன் காக்க ஓர் அர்ப்பணம்


ஆக.29,2016. அன்பு இதயங்களே, இத்தாலியின் மத்திய பகுதியில், கடந்த புதனன்று, எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை 3.36 மணிக்கு அந்தச் சோகம் ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளில், இரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் தரைமட்டமாகின. இது நிலநடுக்கம் என்றுகூட நினைத்துப் பார்க்க முடியாத கணப்பொழுதில், தூக்கத்திலே பலர், நிரந்தரமாகத் தூங்கிவிட்டனர். அமாத்திரிச்சே என்ற நகரில், ஒரு வயதானவர் பராமரிப்பு இல்லத்தில், அவர்களைப் பராமரித்து வந்த கொலம்பிய நாட்டு லூயிஸ் என்ற இளைஞர் விழித்துக்கொண்டு வெளியே வந்து, யாரும் இருக்கின்றீர்களா என்று சப்தம் கொடுத்திருக்கிறார். அந்த இல்லம் முழுவதும் இடிந்துவிட்ட நிலையில், யாரையாவது உயிரோடு இருந்தால் காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் இப்படி சப்தம் கொடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் கட்டிலுக்குக் கீழே அடிபட்டுக்கிடந்த 35 வயது லெஷி என்ற ஓர் அருள்சகோதரி இவரால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். 9 வயது சிறுவன், 3 வயது குழந்தை, 8 வயது சிறுமி இப்படி சில சிறார், இந்தக் கடும் நிலநடுக்கத்தில் அநாதைகளாகி உள்ளனர். அன்பர்களே, இந்த நாட்டில் வாழும் எங்களுக்கு, இவர்களின் துயரம் அதிகமாகவே பாதித்துள்ளது. அன்பர்களே, கடந்த சில நாள்களாக, இப்படித் திடீர் மரணச் செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். வத்திக்கான் வானொலியில், இந்திய அலுவலகத்தில் பல ஆண்டுகள், பகுதி நேரப் பணியாளராக, ஆங்கில மொழிக்குப் பணியாற்றிவந்த, இலங்கை சிங்கள நண்பர் ஸ்டீபன் பெர்னான்டோ அவர்கள், ஆகஸ்ட் 27, கடந்த சனிக்கிழமை திடீரென்று மாரடைப்பால் காலமானார். நல்ல மனிதர், எளிமையானவர், பிறருக்கு உதவும் பண்பாளர். இந்நாள்களில் உயிரிழந்தவர்களையெல்லாம் நன்றியோடு நினைத்து செபிப்போம். நாமும் நம் வாழ்வின் இறுதிப் பயணத்திற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டுமென்பதை இந்த இறப்புகள் நமக்கு நினைவூட்டுகின்றன. 

அன்பர்களே, நிலநடுக்கம், எரிமலை, புயல், மின்னல், தீ, ஆழிப்பேரலை, சூறைக்காற்று, பனிக்காற்று, வெள்ளப்பெருக்கு, வெப்பம், பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதரால் கட்டுப்படுத்த இயலாதவை. நிலநடுக்கம், உலகில் அதிகமான உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்தும், ஓர் இயற்கைப் பேரழிவு. பல நிலநடுக்கங்கள், புவியின் லிலித்தோஸ்பியர் எனும் மேல்தட்டுப் பகுதியிலேயே நிகழ்கிறது. புவியின் மேல்தட்டு பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டுள்ளன. இத்தட்டுக்கள் ஆண்டுக்கு ஏறத்தாழ 2 முதல் 10 செ.மீ வரை நகரக் கூடியன. எதிரெதிராக நகரக்கூடிய இரு பாறைத் தட்டுக்கள் மோதும்போது ஓர் எல்லை உருவாகிறது. அதாவது ஒரு தட்டு வளைந்து மற்றொரு தட்டிற்கு அடியில் செல்கிறது. இதனால் வளைந்த தட்டின் பாகங்களில் அதிக அழுத்தம் மற்றும் அதன் அமைப்பில் மாறுதல் ஏற்படுகிறது. இந்த அழுத்த நிகழ்வால் பிளவுகள் ஏற்படத் துவங்கி, அவை அதிகரித்துக் கொண்டே செல்லும்போது பாறைத்தட்டின் தாங்கும் திறன் குறைந்து தட்டுக்கள் உடைபட்டு அதனால் அவை அனுபவித்து வந்த அழுத்தத்திலிலிருந்து விடுபட்டுக் கொள்ளும் நிகழ்வே புவியில் ஏற்படும் நிலநடுக்கம்( நன்றி நக்கீரன்). ஆறு ரிக்டர் அளவுக்கு மேல் இது ஏற்படும்போது கடும் சேதங்கள் ஏற்படுகின்றன.

அன்பர்களே, இயற்கைப் பேரிடர் என்று சொல்லும்போது, கடந்த டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தை நாம் மறக்க முடியாது. அதற்கு, ஏரிகள் ஆக்கிரமிப்புதான் முக்கிய காரணமாக இருந்தது. அதில் சீமைக் கருவேல மரங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சீமைக் கருவேல மரங்கள், தமிழகத்தில், வேலிக்காகவும் எரிபொருள் தேவைக்காகவும் 1950-களில் அறிமுகமாகின. விரைவாக விதைப்பரவல் செய்யும் இவை, இன்றைக்குத் தமிழகத்தின் 25 விழுக்காட்டு விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. 13 மாவட்டங்களில் 2.10 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் இம்மரங்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‘நச்சு மரங்கள்’ பட்டியலில் இருக்கும் இந்த மரம், நலமான சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்நிலையில், இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, சென்னையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறது என, ஆகஸ்ட் 27, கடந்த சனிக்கிழமையன்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு அதிகம் பணம் தேவை எனக் கூறப்படுகிறது. 2.10 இலட்சம் ஹெக்டேர் கருவேல மரங்களை அழிக்க, பொதுப்பணித் துறை நிர்ணயித்த செலவு 809 கோடி ரூபாய். ஆனால், இந்த மரங்களை அழிப்பதில் ஈடுபட்டுவரும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவ்வளவு செலவு தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2001-ம் ஆண்டிலேயே, தாங்கள் விளையாட்டுப் பயிற்சி எடுப்பதற்காக ஒரு மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். அங்கு புதராகப் படர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை, காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் அகற்றினர். அதன் பலனாக, கபடி, கைப்பந்து, கோகோ, கூடைப்பந்து மற்றும் உடற்பயிற்சிகள் எடுப்பதற்கான சிறந்த விளையாட்டு மைதானமாக அது மாறியது. சீமைக் கருவேல மரங்களை அழித்து விளையாட்டு மைதானமாக்கியதன் விளைவு, அவர்களின் எதிர்காலம் ஒளிமயமானது. தற்போது பிற மாவட்டங்களில் பணியாற்றி வரும் இப்பகுதி இளைஞர்கள் விடுமுறை நாட்களில் இப்பணியை மேற்கொள்ள இங்கு வந்துவிடுவார்களாம். சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, மக்களுக்குப் பலன் தரும் புங்கை மரம் போன்றவற்றை நட்டு கொடுக்கிறார்கள். மாத ஊதியத்தின் ஒரு பகுதியை இதற்காகச் செலவழித்து வருகிறார்கள். இன்னும் ஓராண்டில் சீமைக் கருவேல மரம் இல்லாத கிராமங்களாக ராஜாக்கமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியை மாற்றிவிடுவோம் என்கின்றனர் இந்த இளைஞர்கள். கார்பன்டை ஆக்ஸைடை அதிகமாக வெளியிட்டு, சுற்றுச்சூழலை கெடுத்தல், ஈரப்பதத்தை உறிஞ்சி, பருவமழை பெய்யவிடாமல் தடுப்பது, நிலத்தடி நீரை மாசு கலந்த தண்ணீராக மாற்றுவது, கால்நடைகளின் நலத்தைக் கெடுப்பது, நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சி நீர் ஆதாரத்தை குறைப்பது போன்ற கருவேல மரத்தின் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு தட்டிகளை இவர்கள் ஊர்களில் வைத்துள்ளனர். இவர்களின் முயற்சியால், சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்ட இடம் தற்போது விளையாட்டுப் பூங்காவாக உருவாகி உள்ளது என, தி இந்து இதழில் செய்தி வெளியாகி இருந்தது.

தமிழக அரசின் மாநில மரமான பனை மரம் கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம் மற்றும் பதநீர் மூலம் உருவாகும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை மக்களுக்கு உடல்நலத்தைத் தரும் உணவுப் பொருட்களாக உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. கடந்த 1980-களில் பனை மரத்தொழிலை சார்ந்து ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால், பனை மரத்தின் மதிப்பை நாம் மதிக்காமல் போனதால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு இரையாக்கப்பட்டன. இதனால் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பனை மரங்களை வளர்க்க வேண்டும், இருக்கின்ற மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், பள்ளி ஆசிரியர்கள் தலைமையில் தியாகனூர் ஏரிக்கரையில், ஐந்தாயிரம் பனை விதைகளைக் குழி தோண்டி விதைத்துள்ளனர். அழிவு நிலையில் உள்ள பனை மரங்களைப் பாதுகாக்கவும், ஏரியின் கரையைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும் இதனைச் செய்துள்ளனர். இது குறித்துக் கூறிய தலைமை ஆசிரியர் சிவராமன், 

அரிய பறவை இனங்களுக்கு வாழ்வாதாரமாகவும் பனை மரங்கள் உள்ளன. தூக்கணாங்குருவி உள்ளிட்ட உயரமான இடங்களில் வசிக்கும் சில பறவை இனங்கள் பனை மரத்தில் கூடுகட்டி வசிப்பவை. பனை மரங்கள் அழியும்போது, இந்தப் பறவை இனங்களும் அழிவுக்குத் தள்ளப்படும். ஒரு பறவை அழிந்தால் 10 மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மரக்கன்றுகளை மாணவர்கள் மூலம் பொது இடங்களில் நட்டு வைத்தோம் எனக் கூறினார்.

அன்பர்களே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அரசால் மட்டும் தனித்துச் செயல்பட இயலாது. அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. இதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், இளைஞர்கள், என அனைத்துத் தரப்பையும் வாழ்த்துவோம். ஊக்குவிப்போம். நம்மையும் அதில் இணைப்போம். இயற்கைப் பேரிடர் தொடர்புடைய உள்கட்டமைப்பு குறைவாக உள்ள உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் உள்ளது என்பதை நினைவில் வைப்போம். செப்டம்பர் 1, வருகிற வியாழன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கிறிஸ்தவ சபைகளின் உலக செப நாள். இந்நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் செப வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மனித நலம் காக்க நம்மை அர்ப்பணிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.