2016-08-30 14:36:00

படைப்பைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள்


ஆக.30,2016. படைப்பைப் பாதுகாக்கும் கிறிஸ்தவ சபைகளின் உலக செப நாள்  செப்டம்பர் 1, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, ஐரோப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பு, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் அவை, ஐரோப்பிய கிறிஸ்தவ சுற்றுச்சூழல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், படைப்பைப் பாதுகாப்பதற்கு, கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, புனித பிரான்சிஸ் அசிசியார் விழாவான அக்டோபர் 4ம் தேதி வரையுள்ள காலத்தை, படைப்பைப் பாதுகாப்பதற்குரிய சிறப்புக் காலமாக, ஐரோப்பாவில் பல கிறிஸ்தவ சபைகள் சிறப்பிப்பது அதிகரித்து வருகின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் காலநிலை மாற்றத்தின் கடும் சவால்களை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்மை ஊக்கப்படுத்தியிருப்பது போன்று, படைப்பைப் பாதுகாப்பதில் நம் பொதுவான பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் எனவும் அவ்வறிக்கை விண்ணப்பித்துள்ளது.

படைப்பைப் பாதுகாக்கும் உலகளாவிய செப நாள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில் 1989ம் ஆண்டில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 2015ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவையில் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.