2016-09-01 16:52:00

ஆஸ்திரேலியா-பார்வையற்றவர்களுக்கான பணத்தாள்கள்


செப்.01,2016. ஆஸ்திரேலியாவில், பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், புதிய பணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட் என்ற 15 வயது நிரம்பிய, பிறவியிலேயே பார்வையற்ற சிறுவன் தொடங்கிய இயக்கத்தால், இந்த புதிய பணத்தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; பார்வையற்றோர் தொட்டு உணரக்கூடிய வங்கி நோட்டுகள் வேண்டுமென்று இணையத்தில் மனு ஒன்றை அச்சிறுவன் தொடங்கினான்; 56 ஆயிரம் பேர் அதற்கு ஆதரவளித்தனர்.

இந்த புதிய ஐந்து டாலர் மதிப்புள்ள நோட்டுகள், உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளைக் கொண்டுள்ளது; எதிர்காலத்தில் பிற டாலர் நோட்டுகளில் அதை புரிந்துக் கொள்ளத்தக்க வெவ்வேறு எண்ணிக்கையில் புள்ளிகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், ஏறத்தாழ மூன்று இலட்சத்து அறுபதாயிரம் பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.