2016-09-06 16:09:00

புனித அன்னை தெரேசா குறித்த ஒரிசா முதல்வரின் புகழஞ்சலி


செப்.,06,2016. அன்னை தெரேசாவின் இரக்கம் எனும் புத்தகத்தின் பக்கங்களை திறந்து, மனிதர் ஒவ்வொருவரின் மாண்புக்காக ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார், ஒரிசா முதல்வர், நவீன் பட்நாயக்.

அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்ட அதே நாளில், புபனேஸ்வரின் பேராயர் இல்லத்திற்கு முன்னே உள்ள சாலையை, புனித அன்னை தெரேசா சாலை என பெயரிட்டு திறந்து வைத்த முதல்வர் பட்நாயக் அவர்கள், 1929ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இந்த அல்பேனிய துறவி அன்னை தெரேசா அவர்கள், ஏழைகளுக்கும், உதவித் தேவைப்படுவோருக்கும், மரணத் தறுவாயில் இருப்போருக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் இந்தியாவைத் தேர்ந்துகொண்டார் என்றுரைத்தார்.

இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்டாக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், புனித அன்னை தெரேசாவின் வாழ்வுச் சம்பவங்கள் பலவற்றை எடுத்துரைத்ததுடன், இக்காலத்தை அன்னை தெரேசாவின் நூற்றாண்டு என குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்கள் மீது பெருமளவான தாக்குதல்களை சந்தித்துள்ள ஒரிசா மாநிலத்தில் அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபை சகோதரிகள்,  உதவித் தேவைப்படும் மக்களுக்கென 18 பிறரன்பு இல்லங்கள் வழியாக சேவையாற்றி வருகின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.