2016-09-07 17:16:00

கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகள்


செப்.07,2016. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் 15ம் ஆண்டு நினைவாக, கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகளுக்காக, இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய தொழுகைக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஒற்றுமைக்காக இணைவோம்" என்ற பெயரில் இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவராகிய Foad Aodi என்ற பாலஸ்தீனிய மருத்துவர், தங்கள் தொழுகைக் கூடங்களுக்கு கிறிஸ்தவர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஜுலை மாதம், பிரான்ஸ் நாட்டில், அருள்பணி Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற இறுதி அடக்கச் சடங்கிலும், அதே நேரம் இத்தாலியில் நடைபெற்ற கிறிஸ்தவ வழிபாடுகளிலும் 23,000த்திற்கும் அதிகமான இஸ்லாமியர் கலந்துகொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டும் Foad Aodi அவர்கள், கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்துவருவது, உண்மையான மதங்களின் அடிப்படை உணர்வான ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்தும் என்று கூறினார்.

செப்டம்பர் 11, 12 ஆகிய இருநாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த ஒற்றுமை வழிபாடுகளில் கலந்துகொள்ள தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அழைத்துள்ளதாக, Foad Aodi அவர்கள் கூறியுள்ளார் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.