2016-09-10 15:38:00

அமைதிக்கான கால்பந்து விளையாட்டுக்கு திருத்தந்தை ஆதரவு


செப்.10,2016. வருகிற அக்டோபர் 12ம் தேதி, உரோம் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கும் அமைதிக்கான கால்பந்து விளையாட்டுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ‘Scholas Occurrentes’ என்ற திருப்பீட அமைப்பின் முயற்சியினால், அமைதிக்காக ஒன்றுசேர்ந்து விளையாடுவோம் என்ற இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

உரோமையில் நடைபெறவிருக்கும் இந்த கால்பந்து விளையாட்டு பற்றி பத்திரிகையாளரிடம் அறிவித்த, ‘Scholas Occurrentes’ அமைப்பின் தலைவர் José Maria del Corral அவர்கள், கலாச்சாரச் சந்திப்பை ஊக்குவிப்பதன் வழியாக, அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று, திருத்தந்தை அடிக்கடி கூறி வருவதே, இவ்விளையாட்டுக்குத் தூண்டுதலாக அமைந்தது என்று தெரிவித்தார்.

ரோமா, லாட்சியோ ஆகிய இரு முக்கிய கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் இதில் விளையாடும். ரோமா கழக விழையாட்டு வீரர் Manuel Iturbe அவர்களும், இதில் விளையாடவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

அர்ஜென்டீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ‘Scholas Occurrentes’ உலகளாவிய அமைப்பு, பல்வேறு கலாச்சார மற்றும் சமயப் பின்னணிகளைச் சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.