2016-09-10 15:47:00

ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட அழைப்பு


செப்.10,2016. ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டு வரப்படுமாறு, மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகள் அவை(MECC) அழைப்பு விடுத்துள்ளது.

ஜோர்டன் நாட்டின், அம்மான் நகரில், தங்களின் 11வது பொதுக்கூட்டத்தை இவ்வெள்ளியன்று நிறைவு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ள இந்த அவையின் பிரதிநிதிகள், சிரியா மற்றும் ஈராக்கில், பயங்கரவாதக் குழுக்களோடு நடைபெறும் ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

அதோடு, ஆயுத மோதல்களுக்கு, அமைதியான தீர்வு காணப்படவும், புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு, குறிப்பாக, போர் மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி, தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு காட்டப்படவும் கேட்டுள்ளனர் அப்பிரதிநிதிகள்.

மொசூல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ள கிறிஸ்தவர்கள், பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர் அக்கிறிஸ்தவ சபையினர்.

செப்டம்பர் 6, இச்செவ்வாயன்று தொடங்கிய இக்கூட்டம், செப்டம்பர் 9, இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது. இதில், கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முன்னாள் பேராயர் Fouad Twal உட்பட ஏறத்தாழ 22 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.