2016-09-10 13:40:00

பொதுக்காலம் - 24ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


செப்டம்பர் 11 என்று சொன்னதும், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சி நினைவுக்கு வரலாம். வர்த்தக உலகின் பெருமைக்குரிய சின்னங்களாக உயர்ந்து நின்ற அவ்விரு கோபுரங்களின் மீது இரு விமானங்கள் மோதிய காட்சியும், ஏறத்தாழ 100 நிமிடங்கள் இரு தீப்பந்தங்களைப்போல் எரிந்த அவ்விரு கோபுரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்த காட்சியும், உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டு, அதிர்ச்சியை உருவாக்கின.

தொடர்ந்து வந்த பல நாட்களில், உலக ஊடகங்கள், இந்நிகழ்வை மீண்டும், மீண்டும், பல கோணங்களில் காட்டி, அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி, பதில்கள் தேட முயன்றன. நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு என்ற வட்டங்களைக் கடந்து, நம் அனைவரையும் ஒரு தேடலில் ஈடுபடுத்தியது, இந்நிகழ்வு. மரணம், துன்பம், வன்முறை, நம்பிக்கை என்ற பல கோணங்களில் எழுந்த இத்தேடல்களின் விளைவாக, பல நூறு கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதை, நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. இக்கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:

"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,

நாம் ஒரே நிறத்தவரானோம்.

எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,

நாம் ஒரே வகுப்பினரானோம்.

சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,

நாம் ஒரே மதத்தவரானோம்.

இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது,

நாம் ஒரே உடலானோம்.

இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,

நாம் ஒரே குடும்பமானோம்."

இக்கவிதை வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம் என்பதுதானே, நாம் அனைவரும் கனவு காணும் விண்ணகம். இந்த விண்ணகத்தைத் தொலைத்துவிட்டு, அடிக்கடி தேடி வருகிறோமே! ஒரே இறைவனின் மக்கள் என்ற உன்னத உண்மை, நாம் எழுப்பும் பிரிவுச் சுவர்களுக்குப்பின் காணாமல் போய்விடுகிறது. நாம் எழுப்பிய பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி என்ற அந்த ஒரு நாளிலாவது இடிந்து விழுந்ததே என்று எண்ணி, ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 11ம் தேதியன்று, நாம் நன்றி சொல்லவேண்டும். ஒரு கொடூரமான நிகழ்வு, நம்மை ஒருங்கிணைத்தது என்பதுதான், புதிரான, வேதனையான ஓர் உண்மை. அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக் குறைய, காணாமற்போன பிரிவுச் சுவர்களை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கட்டியெழுப்பி, நம்மையே சிறைப்படுத்திக் கொண்டோம். மத வெறி, நிற வெறி, சாதிய வெறி, என்ற சுவர்கள் உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது, கசப்பான உண்மை.

காணாமல் போவதையும், கண்டுபிடிப்பதையும் எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு கூறிய உவமைகளில், உலகப் புகழ்பெற்ற உவமையான 'காணாமற்போன மகன் உவமை', இந்த அழைப்பை விடுக்கிறது. இந்த உவமைக்கு முன்னதாக, 'காணாமற்போன ஆடு' மற்றும் 'காணாமற்போன காசு' என்ற இரு உவமைகளையும் ஒரு முன்னுரைபோல் தருகிறார், இயேசு. மூன்று உவமைகளிலும், காணாமற்போவதும், கண்டுபிடிப்பதும் நிகழ்கின்றன. ஆடு, காசு இரண்டும் காணாமல் போகின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதோ, அவற்றின் உரிமையாளர்கள். ஆனால், காணாமற்போகும் மகனோ, பன்றிகள் நடுவே, பசியால் துடித்தபோது, தன்னை முதலில் கண்டுபிடிக்கிறார். பின்னர், தன் தந்தையின் இல்லம் திரும்பிவந்து, புது வாழ்வையும் கண்டுபிடிக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறியதால், காணாமல்போய், மீண்டும் தன்னையே கண்டுபிடித்த இளைய மகனையும், வீட்டைவிட்டு வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே காணாமல் போன மூத்த மகனைப் பற்றியும் சிந்திப்போம்.

முதலில், ‘காணாமல் போவது’ என்றால் என்ன என்பதை அறிய முயல்வோம். ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற Ron Rolheiser, OMI என்ற (அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த) ஓர் அருள்பணியாளர், இந்த உவமையைப் பற்றி எழுதும்போது, காணாமல் போவது பற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். தன் வாழ்வில், 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறியுள்ளார்:

“எனக்கு 14 வயதானபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப்போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த, 20 வயதுள்ள ஓர் இளைஞர், என் வீட்டுக்கருகே வாழ்ந்தார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவர் தூக்கில் தொங்கி இறந்தார். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவர், வேலை செய்யும் இடத்தில், ஒரு விபத்தில் இறந்தார். வேறொரு நண்பர், குதிரை சவாரி பழகும்போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தார். இந்த மரணங்கள் எல்லாம், ஒன்றன்பின் ஒன்றாக, ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச் சிறுவனாய் உதவி செய்தேன்.

வெளிப்படையாக, என் உலகம் மாறாததுபோல் நான் காட்டிக்கொண்டாலும், என் உள் உலகம் சுக்குநூறாய் சிதறிப்போனது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னைவிட சோகமான, பரிதாபமான, 14 வயது இளைஞன் ஒருவன் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.”

அருள்பணி Rolheiser அவர்கள், தன் சோகமான முடிவிலேயே தங்கியிருந்திருந்தால், அவரது வாழ்வு திசைமாறி போயிருக்கலாம். அவர் முற்றிலும் காணாமற் போயிருக்கலாம். ஆனால், அவ்வேளையில் அவருக்கு வந்த ஓர் உள்ளொளியைப் பற்றி அவர் இவ்விதம் விவரித்துள்ளார்:

“இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும், அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு, அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில், என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.”

தனது 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறும் Ron Rolheiser அவர்கள், தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு நூல்களைப் பற்றிக் கூறுகிறார். Christina அவர்கள், ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்நூல்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப்பற்றி அவர் எழுதும்போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்" என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்" என்றும் குறிப்பிடுகிறார்.

ஆம், காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும், நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, முற்றிலும் காணாமல் போவதும் உதவி செய்யும். இதற்கு புனித அன்னை தெரேசா ஓர் எடுத்துக்காட்டு.

செப்டம்பர் 4, சென்ற ஞாயிறன்று, அன்னை தெரேசாவை புனிதராக உயர்த்தி மகிழ்ந்தோம். பெருமைப்பட்டோம். இந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்ததோர் இடத்தை, இந்தப் புனிதர், மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைச் சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். காணாமல் போவதையும், இப்புனிதரின் வாழ்வையும் இணைத்து நான் பேசுவது ஆச்சரியமாக இருக்கலாம். எனினும் அந்தப் புதிரைப் புரிந்து கொள்ள முயல்வோம்.

அன்னை தெரேசா அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்குத் தேவையான வழிமுறைகளை ஒருங்கிணைத்துவந்த அருள்பணி Brian Kolodiejchuk என்பவர், 2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற நூலை வெளியிட்டார். அன்னை தெரேசா அவர்கள், தனிப்பட்ட வகையில் எழுதிவைத்திருந்த எண்ணங்கள், இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள், அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டு, அவர் புனிதராக உயர்த்தப்படுவதற்கு முன்னர், ஆகஸ்ட் 16ம் தேதி வெளியான மற்றொரு நூலிலும், அன்னையின் உள்மனப் போராட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “A Call to Mercy: Hearts to Love, Hands to Serve” என்ற தலைப்பில் வெளியான இந்நூலில், அன்னை அவர்கள், தன் ஆன்மீக வழிகாட்டிக்கு எழுதிய ஒரு மடலில் நாம் காணும் வரிகள் இதோ: "அனைவராலும் கைவிடப்பட்டு, தன் துன்பங்களோடு மட்டுமே வாழும் ஏழையின் நிலை, ஆன்மீக வாழ்வில் நான் உணரும் கைவிடப்பட்ட நிலையின் உண்மையான பிரதிபலிப்பு."

பலரும் செய்யத்தயங்கும் ஒரு பணியை, ஆழ்ந்த அன்புடன், நாள் தவறாமல் செய்து வந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா? அதுவும், அவர் அப்பணிகளைச் செய்து வந்த காலத்தில், இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? அன்னை தெரேசா அவர்களின் உள்மனப் பதிவுகளை வாசிக்கும்போது, இத்தகையக் கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.

ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற உன்னத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்டகாலம், இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்க முடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அன்னை தெரேசா அவர்கள் செய்துவந்த பணியில், நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் நிகழ்ந்த துன்பங்களையே, ஒவ்வொரு நாளும், மீண்டும், மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே.

கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எவ்வித சலனமுமில்லாமல் அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், அவர், உணர்வுகளற்ற ஓர் இயந்திரமாய் இயங்கியிருக்க வேண்டும். தன்னைச்சுற்றி நிகழ்வனவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் உலகத்திற்குள்ளேயே வாழும் பலருக்கு, காணாமற்போகும் வாய்ப்புக்கள் இருக்காது. அவ்வாறு காணாமல் போகாமல், பாதுகாப்பாக வாழ்பவர்கள், பல உண்மைகளை தொலைத்து விட வாய்ப்புண்டு. இந்நிலையில் வாழ்ந்தவர், இன்றைய உவமையில் நாம் சந்திக்கும் மூத்த மகன்.

Timothy Keller என்பவர் எழுதிய 'The Prodigal God' என்ற நூலில், இரு மகன்களும் மேற்கொண்ட வாழ்வுப் பயணத்தை ஒப்பிடுகிறார். இளைய மகன் தன்னையே கண்டுகொள்ள வேண்டும் என்ற தேடலில், தந்தையின் கட்டுப்பாட்டைவிட்டு விலகிச் செல்கிறார். பலரது மனங்களைப் புண்படுத்துகிறார். தான் தேர்ந்துகொண்ட தேடல் பாதை தவறானது என்பதை உணர்ந்ததும், தாழ்ச்சியுடன் தந்தையைத் தேடி வருகிறார். தந்தையின் உறவில்தான் தன் மீட்பு உண்டு என உணர்கிறார்.

மூத்தவரோ, தன் சொந்த முயற்சியால் மீட்படைய முடியும் என்ற உறுதியில், தந்தைக்கும், அனைவருக்கும் ஏற்றவராக வாழ்கிறார். ஆனால், தன் வாழ்வுக்கு உரிய வெகுமதிகளை தந்தை வழங்கியிருக்கவேண்டும் என்ற கணக்குடன் வாழ்ந்து வருகிறார். அவர் போட்டுவைத்த கணக்கு தவறாகிப் போனது என்று அறிந்ததும், அவரது குணம் தலைகீழாக மாறுகிறது. அதுவரை அவர் அணிந்து வாழ்ந்த முகமூடிகள் வீழ்ந்தால், அவர் வெறுப்பில் காணாமல் போகிறார். வீட்டுக்குள் அவர் பாதுகாப்பாக வாழ்ந்தாலும், அவர் தனக்குள் வளர்த்துக்கொண்ட சுயநலக் காட்டில் அவரே தொலைந்துபோகிறார்.

நாம் எல்லாருமே வாழ்வில் காணாமல் போயிருக்கிறோம். அறியாத, புரியாதச் சூழல்களில் திகைத்து நின்றிருக்கிறோம். ‘கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப்போல்’ உணர்ந்திருக்கிறோம். அந்நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர், புனித அன்னை தெரேசாவைப் போல்.

பன்றிகள் நடுவே, பசியில் மயங்கியிருந்த இளைய மகன், பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவையே இனி தன் வாழ்வு என்ற விரக்தியான எண்ணங்களால் ஒரு பாலைநிலத்தை உருவாக்கி, அங்கு காணாமற் போய்விடாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்" என்று எழுந்தாரே, அதுதான் அழகு.

காணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப்போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை, வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும், விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்கமுடியும்.

இறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மையும், நம் இறைவனையும் கண்டுபிடிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.