2016-09-12 16:40:00

மீட்கப்படமுடியாத பாவி என்று எவரும் இல்லை - திருத்தந்தை


செப்.12,2016. இறைவனின் உதவி நமக்கு இருக்கும்போது, எழுந்துவர இயலாத பாவக்குழி என்ற ஒன்று இல்லை என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், இயேசு கூறியுள்ள, காணாமற்போன ஆடு, நாணயம், மற்றும் மகன் என்ற மூன்று உவமைகள் குறித்து மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீட்கப்படமுடியாத பாவி என்று எவரும் இல்லை, நாம் பாவம் செய்யும்போதும், நாம் நலம் பெறவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் என்று கூறினார்.

பாவிகள் மட்டில் இறைவன் இரக்கமுள்ளவராக இருக்கிறார், அனைவரையும் நோக்கி தன் கரங்களை விரித்து அரவணைக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, காணாமல்போனதை மீண்டும் கண்டுபிடிப்பதில் பெருமகிழ்வும், கொண்டாட்டமும் உருவாகின்றன என்று எடுத்துரைத்தார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனந்திருந்தி, தன்னைநோக்கி திரும்பிவருவோரைக் குறித்து, இறைவனும், இறைமக்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்கின்றனர், ஏனெனில், யூபிலி என்ற வார்த்தையே, மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைக்' குறிப்பதாகும் என்று மேலும் கூறினார் திருத்தந்தை.

மீட்கப்படமுடியாத பாவி என்று ஒருவரும் இல்லை என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை அமைந்திருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.