2016-09-14 16:49:00

இரக்கத்தின் தூதர்கள் – புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா - 2


செப்.14,2016. செப்டம்பர் 14, திருச்சிலுவையின் மகிமை விழா. இச்சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கிறிஸ்துவே, இறைத்தந்தையின் இரக்கமுள்ள முகத்தின் வெளிப்பாடு. இரக்கத்தின் அரசராகிய இயேசுவை, புனித அருள்சகோதரி மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், பலமுறை காட்சி கண்டு, அவரோடு உரையாடியுள்ளார். இக்காட்சிகள் 1930ம் ஆண்டிலிருந்து, இப்புனிதர் இறந்த 1938ம் ஆண்டு வரை நீடித்தன. இக்காட்சிகளில் இறை இரக்கத்தின் பக்தி குறித்து, இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினார். இக்காட்சிகளில் தாம் சொல்வதை, நாள்குறிப்பேட்டில் எழுதி வைக்குமாறும் இயேசு பணித்தார். பவுஸ்தீனா அவர்களின் 600 பக்கங்கள் கொண்ட நாள்குறிப்பேட்டிலிருந்தே இக்காட்சிகள் பற்றிய பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஏனென்றால் இச்சகோதரி, தனது ஆன்ம வழிகாட்டி மற்றும் கன்னியர் இல்லத் தலைவரைத் தவிர, வேறு எவருக்கும் அக்காட்சிகள் பற்றி அறிவிக்கவில்லை. இக்குறிப்புகள், பின்னாளில் “நாள்குறிப்பேடு : எனது ஆன்மாவில் இறை இரக்கம்(Diary:Divine Mercy in My Soul)” என்னும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டன. இவை, தமிழ், மலயாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, அரேபியம் உட்பட, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புனித பவுஸ்தீனா, தனது காட்சியை இவ்வாறு வர்ணித்திருக்கிறார்.

“அது, 1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஞாயிறு. அன்று இரவு Płock நகரில், எனது அறையில் இருந்தபோது, இயேசு, இறைஇரக்கத்தின் அரசராகத் தோன்றினார். இவர், வெள்ளை உடையணிந்து, இதயத்திலிருந்து சிவப்பு மற்றும் வெளிறிய கதிர்கள் வருவது போல் காட்சியளித்தார். "இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்"(போலந்து மொழியில்:"Jezu, ufam Tobie") என்ற கையெழுத்துடன், நீ பார்ப்பது போலவே ஓர் உருவத்தை வரைவாயாக. இந்தத் திருவுருவத்தை வணங்கும் ஆன்மா அழிந்து போகாது என்று உனக்கு வாக்குறுதி அளிக்கிறேன்... இந்த இறை இரக்கத் திருவுருவம், உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறன்று, ஆடம்பரமாக ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். அந்த ஞாயிறே, இரக்கத்தின் விழாவாக இருக்கும்..”  

இவ்வாறு இயேசு காட்சியில் கூறியதாக, தனது நாள்குறிப்பேட்டில் (நோட்டு 1,எண்கள் 47,48) எழுதி வைத்திருக்கிறார் அருள்சகோதரி பவுஸ்தீனா. இதை எப்படி வரைவது என்று தெரியாமல், Płockல் கன்னியர் இல்லத்திலிருந்த சில சகோதரிகளை அணுகினார் இவர். ஆனால் உதவி கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகள் சென்று, இவர் வில்னியுஸ் நகருக்கு மாற்றலாகிச் சென்றவுடன், ஓர் ஓவியர், இவர் விவரித்தது போலவே வரைந்து கொடுத்தார். மேலும், 1932ம் ஆண்டு, நவம்பரில், தனது இறுதி அர்ப்பணத்திற்குத் தயாரிப்பதற்காக, வார்சா திரும்பிய அவர், 1933ம் ஆண்டு மே முதல் தேதியன்று, இறுதி அர்ப்பணத்தைக் கொடுத்து, சபையில் நிரந்தர உறுப்பினரானார். பின்னர் அதே ஆண்டில், வில்னியுஸ்க்கு அனுப்பப்பட்டார். அங்கே காய்கறி பயிரிடும் தோட்ட வேலை இவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்நகர்க்குச் சென்ற சில நாள்களிலே, அருள்சகோதரிகளுக்கு ஆன்மீக குருவாக நியமிக்கப்பட்ட அருள்பணி ஸ்போக்கோ அவர்களைச் சந்தித்தார் பவுஸ்தீனா. அருள்பணி ஸ்போக்கோ, தற்போதைய வில்னியுஸ் பல்கலைக்கழகத்தில், மேய்ப்புப்பணி இறையியல் பேராசிரியராவார்.

அருள்பணி ஸ்போக்கோ அவர்களிடம், தனது காட்சிகளை விவரித்தார்    அருள்சகோதரி பவுஸ்தீனா. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அவரை, உளவியல் மருத்துவரிடம் அனுப்பி, அவர் நன்றாகப் பரிசோதனை செய்யப்படுமாறு      கேட்டுக்கொண்டார். ஆனால், அருள்சகோதரி பவுஸ்தீனா, முழுவதும் நல்ல மனநலத்தோடு இருக்கிறார் என, உளவியல் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் தெரிவித்தன. அதன்பின்னர், அருள்சகோதரி பவுஸ்தீனா மீது நம்பிக்கை வைத்து, அவரின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் அருள்பணி ஸ்போக்கோ. அதேநேரம். அருள்சகோதரி பவுஸ்தீனா, தான் காட்சிகளில் கண்ட அனைத்தையும் எழுதுமாறும் அவர் ஊக்குவித்தார். அந்த அருள்பணியாளர் தான் பணியாற்றிய, அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கலைஞருமான Eugene Kazimierowski என்பவரை, 1934ம் ஆண்டு சனவரியில் அருள்சகோதரி பவுஸ்தீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அச்சகோதரி விவரித்தது போன்றதோர் உருவப்படத்தை, அதே ஆண்டு ஜூனில் வரைந்து முடித்தார் Kazimierowski. இந்த இறை இரக்க இயேசுவின் திருவுருவப் படமே, அருள்சகோதரி பவுஸ்தீனா காட்சியில் கண்ட இயேசுவின் உருவம் போன்றதாகும்.

இறை இரக்கத்தின் திருவுருவப் படம், பொதுப்படையாக கவுரவப்படுத்தப்பட வேண்டுமென்று, 1935ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதி, புனித வெள்ளியன்று, இயேசு காட்சியில் அருள்சகோதரி பவுஸ்தீனாவுக்குக் கூறினார். அதே ஏப்ரல் 26ம் தேதி, உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறன்று, இப்படம் பொதுவில் வைக்கப்பட்டது. இதற்குப் பின்னர் இப்பக்தி எங்கும் பரவியது. இப்பக்தியைப் பரப்புவதற்கென்றே, புதிய ஒரு துறவு சபையும் ஆரம்பிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ், இப்படத்தை உரோமையில் ஆசீர்வதித்தார். இத்திருத்தந்தையின் காலத்தில், இறை இரக்கம் பற்றி, வத்திக்கான் வானொலியும் பலமுறை ஒலிபரப்பியது.   

அருள்சகோதரி மரிய பவுஸ்தீனா, காச நோயால் பாதிக்கப்பட்டு, தனது 33ம் வயதில் கிராக்கோவில், 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் இறைவனடி சேர்ந்தார். இவர், 1993ம் ஆண்டு, ஏப்ரல் 18ம் நாள், முத்திப்பேறுபெற்றவராகவும்,  பின்னர் 2000மாம் ஆண்டு ஏப்ரல் 30 நாள் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார். 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராக அறிவிக்கப்பட்ட இவரின் விழா நாள் அக்டோபர் 5.

கடவுள் எல்லாரையும் அன்புகூருகிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிடமுடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது கடவுளின் அளவிடமுடியாத இரக்கம் நம்மீது பாய்தோடி வரும். பாவியின் சீர்கேடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது என்று நாள்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார், இறை இரக்கப் புனித மரிய பவுஸ்தீனா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.