2016-09-14 17:42:00

பாராலிம்பிக்கில் உலகச் சாதனை படைத்த இந்திய வீரர்


செப்.14,2016. பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா (Devendra Jhajharia) அவர்கள், தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் எஃப் 46 பிரிவில் 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்து, தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஜஜாரியா. இது உலகச் சாதனை என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

2004 ஏதென்ஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்ட ஜஜாரியா அவர்கள், 62.15 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தைக் கைப்பற்றினார். 12 வருடங்கள் கழித்து 2016 ரியோ பாராலிம்பிக்கில் 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்த தேவேந்திர ஜஜாரியா, தன்னுடைய முன்னாள் ஒலிம்பிக் சாதனையை முறியடித்துள்ளார். ரியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 4-வது பதக்கம் இதுவாகும்.

ஏற்கனவே உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தங்கமும், அதே பிரிவில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் பாட்டி அவர்கள் வெண்கலமும் வென்றனர்.

செப்டம்பர் 12, இத்திங்களன்று, குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் அவர்கள் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார். இப்போது தேவேந்திர ஜஜாரியா அவர்கள், புதிய உலகச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மாற்றுத்திறன் பெற்ற பெண்களில் முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்ற பெருமைக்கு உரிய தீபா மாலிக் அவர்கள், “இந்திய மக்கள், மாற்றுத் திறனாளிகள் விளையாட்டின் சாத்தியக்கூறுகள் பற்றி விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என கூறியிருக்கிறார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.