2016-09-15 16:09:00

இலத்தீன், கீழைவழிபாட்டுமுறை திருஅவைகளில் விதிமுறை மாற்றங்கள்


செப்.15,2016. அருள்அடையாளங்களைப் பொருத்தவரை, இலத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும், கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் இடையே நிலவும் வேறுபாடுகள், ஐயங்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வகுத்துள்ள ஒரு சில விதிமுறை மாற்றங்கள், இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.

இலத்தீன் மற்றும் கீழை வழிபாட்டு முறை திருஅவைகளில் பின்பற்றப்படும் திருஅவை சட்டங்கள் சிலவற்றில் மாற்றங்களைக் கொணர்ந்து, Motu Proprio எனப்படும் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் திருத்தந்தை எழுதியுள்ள மடலை, திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.

ஓரிடம்விட்டு, வேற்றிடம் செல்லும் கட்டாயம் அதிகரித்துவிட்ட இன்றைய உலகில், இலத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோர் மத்தியில், கீழைவழிபாட்டு முறையைப் பின்பற்றுவோர் வாழவேண்டியிருப்பதால், ஒரு சில மாற்றங்களை எண்ணிப் பார்க்க, தான் விழைவதாக திருத்தந்தை அவர்கள், இம்மடலின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

திருமுழுக்கு பெறும் குழைந்தையின் பெற்றோர், வெவ்வேறு வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்கள் எனில், அவர்களது குழந்தை, தந்தை பின்பற்றும் வழிபாட்டு முறையில் திருமுழுக்கு பெறவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும், அக்குழந்தை, 14 வயது நிறைந்தபின், இலத்தீன் வழிபாட்டு முறையிலோ, வேறு வழிபாட்டு முறையிலோ திருமுழுக்கு பெற விரும்பினால், அந்த விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றம் ஒன்றைக் கொணர்ந்துள்ளார்.

இதேவண்ணம், ஏனைய அருளடையாளங்களைப் பெறுவதிலும் நிலவிவரும் ஒரு சில ஐயங்களை நீக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 11 விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தி, தன் மடலை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.