2016-09-16 15:53:00

ஆயர்களின் மேய்ப்புப்பணியில் இரக்கம் முதன்மை பெறவேண்டும்


செப்.16,2016. பாலை நிலத்தில் மோசேயைத் தேடிக் கண்டுபிடித்து, தன் மக்களின் பணிக்கென அழைத்த இறைவன், தன் அற்புதமான இரக்கத்தால், உங்கள் ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் புதிய ஆயர்களிடம் கூறினார்.

கடந்த ஈராண்டுகள் ஆயர்களாக நியமனம் பெற்றவர்கள், வத்திக்கானில் மேற்கொண்டுள்ள ஓர் அறிமுகப் பயிற்சியின் சிகரமாக, செப்டம்பர் 16, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்த வேளையில், திருத்தந்தை வழங்கிய உரையில், ஆயர்கள் பெற்றுள்ள சிறப்பு அழைப்பைக் குறித்துப் பேசினார்.

இறைவன் வழங்கும் தனிப்பட்ட அழைப்பு, அவர் காட்டும் பெரும் கருணை, உண்மையான இரக்கத்தின் கதவான இயேசுவின் இதயத்தைத் தாண்டிச் செல்லுதல், ஆயர்களின் மேய்ப்புப்பணியில் இரக்கம் முதன்மை பெறுதல் ஆகிய கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய ஆயர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஆயர்கள் மேற்கொள்ளவேண்டிய இரக்கப்பணியை தன் உரையின் மையப்பொருளாக்கிய திருத்தந்தை, அப்பணியைத் திறம்பட ஆற்ற மூன்று பரிந்துரைகளை முன்வைத்தார்.

தன் வாழ்வு முழுவதும் தவறுகளையே செய்துவந்த குற்றவாளி, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய இயேசுவிடம் "குற்றம் ஒன்றும் காணாமல், நல்லதையே கண்டதுபோல்" (காண்க. லூக்கா 23,41), ஆயர்களின் நன்மைத்தனத்தால், அனைவரும் அவர்கள்பால் ஈர்க்கப்படவேண்டும் என்பதை, திருத்தந்தை தன் முதல் பரிந்துரையாகக் கூறினார்.

அக்கறையின்றி, தூரமாய் இருக்கும் இறைவனை நாம் மறந்துவிடலாம். ஆனால், நம் வாழ்வில் ஈடுபட்டு, நமக்காகத் துன்பங்களைத் தாங்கும் இறைவனை அலட்சியம் செய்யமுடியாது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இயேசு தன் சீடர்களுக்கு இறையரசைக் குறித்து விளக்கியபோது காட்டிய பொறுமையை, ஆயர்கள் தங்கள் மக்களிடம் காட்டவேண்டும் என்பது, திருத்தந்தை முன்வைத்த இரண்டாம் பரிந்துரையாக இருந்தது.

தாங்கள் பின்பற்ற இயலாத புண்ணியப் பாதையில், தங்கள் மந்தைகளை ஆயர்கள் அனுப்ப முயல்வது பயனளிக்காது என்று கூறியத் திருத்தந்தை, குறிப்பாக, தங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அருள் பணியாளர்கள், அருள்பணிக்கென பயிற்சி பெறுவோர் ஆகியோரிடம் மிகுந்த பொறுமையும் பரிவும் கொண்டிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆயர்கள் கொண்டிருக்கவேண்டிய இரக்கத்திற்கு, நல்ல சமாரியரை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறி, இரக்கம், தொடர்ந்து பெருக்கெடுத்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதை, தன் மூன்றாவது பரிந்துரையாக புதிய ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை.

எரிகோவுக்குச் செல்லும் வழியில் அடிபட்டிருந்தவரைக் கண்ட சமாரியர், செயலில் இறங்கியது மட்டுமல்லாமல், தன் இரக்கச் செயலை முழுமையாக நிறைவேற்றினார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அத்தகைய இரக்கம் ஆயர்களுக்கு இயல்பாகத் தோன்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பல வழிகளில் காயப்பட்டிருக்கும் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, குடும்பங்களில் உள்ள காயங்களைக் கண்டு, ஆயர்கள் விலகிச் செல்லாமல் இருக்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஒரு மேய்ப்பராக, தந்தையாக, சகோதரராக ஆயர்களாகிய நாம் விளங்க, இறைவனின் ஆசீரை வேண்டுவோம் என்று, திருத்தந்தை புதிய ஆயர்களுக்கு வழங்கிய உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.