2016-09-19 17:10:00

உலக அமைதிக்காக அசிசியில் இணைந்து செபிப்போம்


செப்.19,2016. போரிடும் இன்றைய உலகில் அமைதியின் தேவை அதிகமதிகமாக உள்ளது என்பதை மனதில்கொண்டு, இச்செவ்வாயன்று அசிசி நகரின் உலக அமைதி நாளோடு இணைந்து, அனைவரும் செபிப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை, செப்டம்பர் 20ம் தேதி, இச்செவ்வாய்க் கிழமையன்று, தான் அசிசி நகரில் அமைதிக்கான செப வழிபாட்டில் கலந்துகொள்ள செல்லவிருப்பதாகவும், பங்குதளங்களும், திருஅவை நிறுவனங்களும், கடவுள் நம்பிக்கையுள்ள அனைவரும், உலக அமைதிக்கான அந்நாள் செபத்தில் ஆன்மீக அளவில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

உலக மக்களிடையே அமைதிக்கும் ஒப்புரவுக்குமான நம் பொது அர்ப்பணத்தை, அசிசியின் புனித பிரான்சிஸின் சகோதரத்துவம் மற்றும் தாழ்ச்சியின் வழியில் செயல்படுத்துவோம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சான் எஜிதியோ என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பால் அசிசி நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள அமைதிக்கான செப வழிபாட்டில் ஏறத்தாழ 400 மதப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.