2016-09-20 17:13:00

அமைதிக்கான செபத்தில் அகில திருஅவையுடன் இந்திய திருஅவை


செப்.20,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பையேற்று, உலகக் கத்தோலிக்கர்கள் அனைவரோடும் இணைந்து, இந்தியத் திருஅவையும், உலக அமைதி வேண்டி, செபத்தில் தன்னை ஈடுபடுத்தியுள்ளதாக அறிவித்தார், மும்பை பேராயரான, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இப்பேரவையின் செயற்குழு கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை நிறைவேற்றுகையில், இந்தியத் திருஅவை, அகில உலக திருஅவையுடன் தன் ஒன்றிப்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக இது விளங்குகிறது என்று கூறினார்.

ஏழைகள், துன்புறுவோர், நோயுற்றோர் ஆகியோருக்கு இந்தியத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்து வலியுறுத்திப் பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருஅவையின் கல்வி நிலையங்களும், மருத்துவ மனைகளும் எவ்வித பாகுபாடுமின்றி, அனைவருக்கும் பணியாற்றுவதையும் சுட்டிக்காட்டினார்.

காஷ்மீர் மாநிலத்தின் ஊரி நகரில், இந்திய இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தன் செப உறுதிப்பாட்டையும், இறந்தோர் குடும்பங்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நாட்டின் அமைதிக்காகவும், ஆசியா மற்றும் உலக அமைதிக்காகவும் செபிப்பதாகக் கூறினார்.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.