2016-09-21 15:46:00

இரக்கத்தின் தூதர்கள்–அடிமைகளின் நண்பர் புனித பீட்டர் கிளேவர்


செப்.21,2016. “அடிமைமுறையை சகித்துக்கொள்வது, உண்மையில், மனிதமற்ற பண்பை சகித்துக்கொண்டதாகும்” என்று, 1769ம் ஆண்டில் கிரான்வில்லே ஷார்ப் என்பவர் சொன்னார். 15 மற்றும் 19ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக, ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு விலங்குகள் போன்று கொண்டுவரப்பட்ட மனித அடிமைகள் ஏறத்தாழ 2 கோடியே 32 இலட்சம் பேர். இந்த அடிமை வர்த்தகத்தை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 1821ம் ஆண்டு முதல், 1830ம் ஆண்டுவரை, ஆண்டுக்கு எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகள் வீதம், பிரித்தானியர்களால் ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டுள்ளனர். புதிய உலகம் எனப்படும் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கரும்புப் பண்ணைகளிலும், பிற விவசாயம் மற்றும் பிற வேலைகளுக்குமென, இந்த அடிமைகள், இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு, குதிரைகள், கோழிகள் போன்று, விலங்குகளாக, சரக்குக் கப்பல்களில் அடைத்து வைக்கப்பட்டு, பசியும் பட்டினியுமாகக் கொண்டுவரப்பட்டார்கள் என்று வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 

1510ம் ஆண்டில், இஸ்பெயின் அரசர் ஃபெர்டினான்டு, புதிய உலகில், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 250 ஆப்ரிக்கர்களை, கப்பல் வழியாகக் கொண்டு வருவதற்கு அங்கீகாரம் அளித்தார். இதுவே, இஸ்பானியர்கள், ஆப்ரிக்க அடிமைகளை அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதற்கு பிள்ளையார் சுழிபோட்ட நிகழ்வாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சரியாக நூறு ஆண்டுகள் சென்று, புனித பீட்டர் கிளேவர் அவர்களும், அடிமை வர்த்தகம் ஓஹோ என்று நடைபெற்றுவந்த, அப்போதைய கார்த்தஜேனா நகருக்கு, அதாவது தற்போதைய கொலும்பியா நகரத்திற்குச் சென்றார். “கடவுள் என்முன் இரு பெரும் திட்டங்களை வைத்திருக்கிறார். ஒன்று, ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்தை ஒழிப்பது. இரண்டு நல்ல நன்னெறியில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது” என்று, வில்லியம் வில்பெர்போர்ஸ் என்பவர் சொன்னார். இந்தக் கூற்றுப்படித்தான், புனித பீட்டர் கிளேவர் அவர்களும், உணர்ந்திருப்பார் என்று சொல்லலாம். 

இஸ்பெயினில், பணக்கார விவசாயக் குடும்பத்தில், 1580ம் ஆண்டில் பிறந்த இவர், தனது இருபதாவது வயதில், 1601ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். இதற்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து, இஸ்பானிய மறைப்பணித் தளங்களில் இவரைப் பணிபுரிய அச்சபைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இயேசு சபையில் பயிற்சியை முடிப்பதற்கு இவருக்கு மேலும் ஆறு ஆண்டுகள் இருந்தன. அதனால், கிளேவரை, தென் அமெரிக்காவில் இந்தப் பயிற்சிப் படிப்பை முடிக்கச் சொன்னார்கள். புனித கிளேவர் தென் அமெரிக்கா சென்றவுடன், இவர் கண்ட முதல் காட்சி, இவரை மிகவும் வேதனைப்படுத்தியது. ஆப்ரிக்க அடிமைகளின் கடும் துன்ப நிலையைக் கண்டு, இவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். 1622ம் ஆண்டில், இவர் அருள்பணியாளரானபோது, “எப்போதும் நீக்ரோக்களின் அடிமையான பீட்டர் கிளேவர்” என்றே கையெழுத்திட்டார்.

புனித பீட்டர் கிளேவர், தனது பணியை முதலில் கார்த்தஜேனாவில் தொடங்கினார். ஏனென்றால், கார்த்தஜேனா துறைமுகத்தில்தான், அடிமைகளை பெருமளவில் அடைத்துக்கொண்டு வந்த பெரிய பெரிய கப்பல்கள் தவறாமல் வந்து கொண்டிருந்தன. அடிமைகளை ஏற்றி வந்த கப்பல்கள் எவ்வளவு மோசமானவைகளாக இருந்தன என்றால், ஆப்ரிக்காவில் இதில் ஏற்றப்படும் ஆண், பெண் அடிமைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், வரும் வழியிலேயே இறந்து விட்டனர். இதையறிந்த கிளேவர், அடிமைகள், துறைமுகத்தில், கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் வரைக் காத்திருப்பதில்லை. கப்பல்களில் அடிமைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு இவரே சென்று, முதலில் அவர்களுக்கு ஏதாவது குடிக்கக் கொடுத்தார். பின்னர் அவர்கள் விலைகூறி விற்கப்பட்ட  அடிமைச் சந்தைக்கு, அவர்களோடு சேர்ந்து இவரும் சென்று, மதுபானமும், ரொட்டியும், மருந்தும், ஆடையும் கொடுத்தார். இவ்வாறு, ஆப்ரிக்க அடிமைகளின் உடல்சார்ந்த தேவைகளை மட்டுமின்றி, ஆன்மா சார்ந்த தேவைகளையும் கவனித்து உதவி செய்தார் கிளேவர். மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன், அவர்களின் மனித மாண்பை உணரச் செய்தார். கடவுள் அவர்களை அன்புகூர்கிறார் என்பதை எடுத்துச் சொன்னார். விரும்பியவர்களுக்கு, திருமுழுக்கும் அளித்தார். பிறகு, அந்த அடிமைகள் வேலை செய்த பண்ணைகளுக்கும் சென்று, ஏற்கனவே திருமுழுக்குப் பெற்றவர்களைச் சந்தித்து, அவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தினார். அதோடு அவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். தான் வைத்திருந்த படங்களையும், மற்றும் பிற குறிப்புக்களையும் அவர்களிடம் கொடுத்து, தாங்களும் மனிதர்களே என்ற உணர்வையும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளையும், இறைவன் அவர்கள்மீது வைத்துள்ள அன்பையும், எடுத்துச் சொன்னார். அந்த பண்ணை நிலங்களுக்கு இவர் சென்ற போதெல்லாம் அடிமைகள் தங்கியிருந்த காலனிகளிலே இவரும் தங்கினார். அடிமைமுறைகளை ஆதரித்த சில இயேசு சபை அருள்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தார். ஆயினும் தனது கொள்கையில் உறுதியுடன், ஆப்ரிக்க அடிமைகளின் நல்வாழ்வுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார் புனித கிளேவர்.

புனித பீட்டர் கிளேவர், அடிமைகள் மத்தியில் ஆற்றிய அயராத பணியால், நோயுற்று, கடுமையாய்த் துன்பம் அனுபவித்து, 1654ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி காலமானார். இவர் இறந்தபோது, மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட அடிமைகளுக்குத் திருமுழுக்குக் கொடுத்திருந்தார் எனச் சொல்லப்படுகிறது. இன்று, உலகில் 2 கோடியே எழுபது இலட்சம் பேர் அடிமைமுறையில் சிக்கியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை, அக்காலத்திய அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தில் துன்புற்ற ஆப்ரிக்க அடிமைகளின் எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகம் என்று, லீசா கிறிஸ்டின் என்பவர் சொல்லியிருக்கிறார். அன்பர்களே, பல வழிகளில் மனிதமற்ற நிலையில் வாழ்வோரை, நோயாளரை, இந்த இரக்கத்தின் ஆண்டில், நாமும், சந்தித்துப் பேசலாம். மனிதர்கள், மனிதர்களாக நடத்தப்பட உதவலாம். இறைவனின் இரக்கத்தைப் பெற்றுள்ளோம். அதைப் பிறருக்கும் வழங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.