2016-09-21 17:18:00

"தாகமாயிருக்கிறேன்" - திருத்தந்தை வழங்கிய தியான உரை


செப்.21,2016. "தாகமாயிருக்கிறேன்" (யோவான் 19:28) என்று கூறிய இயேசு, சிலுவையில் அறையப்பட்டிருக்கும் உருவத்திற்கு முன் கூடியிருக்கும் நாம், மனிதர்களிடையே, பசியைவிட தாகம் ஒரு பெரும் தேவையாக உள்ளது என்பதை உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று அசிசி நகரில் உலக அமைதி செப நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள சென்றிருந்த திருத்தந்தை, புனித பிரான்சிஸ் பசிலிக்காவில், மாலை நான்கு மணியளவில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் வழங்கிய தியான உரையில் இவ்வாறு கூறினார்.

இயேசு கொண்ட தாகம், உடல் சார்ந்த ஒரு தாகம் என்றாலும், அன்பு என்ற வற்றாத ஊற்றை வழங்குவதற்கு அவர் அதிக தாகம் கொண்டிருந்தார் என்று திருத்தந்தை தான் வழங்கிய தியான உரையில் கூறினார்.

புனித அன்னை தெரேசா நிறுவிய துறவு சபையின் அனைத்து இல்லங்களிலும், சிலுவைக்கு அருகே, "தாகமாயிருக்கிறேன்" என்ற வார்த்தை வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அப்புனிதர் கூறியதை தன் தியான உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, வறியோருக்கு ஆற்றிய பணிகள் வழியே, அன்னை தெரேசா, கிறிஸ்துவின் தாகத்தைத் தீர்த்தார் என்று எடுத்துரைத்தார்.

போரின் விளைவுகளால் துன்புறும் வறியோர், அமைதிக்காக எழுப்பும் அழுகுரலை கேட்க விரும்பாதவர்கள், தொலைக்காட்சியின் அலைவரிசைகளை எளிதில் மாற்றுவதுபோல், தங்கள் உள்ளங்களையும் இந்த அழுகுரலை கேட்க முடியாத வண்ணம் மாற்றிக்கொள்கின்றனர் என்று தன் தியான உரையில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

தாகத்துடன் உயிர் நீத்த இயேசுவின் விலாவிலிருந்து வெளியான நீர், இவ்வுலகில் தாகமாயிருக்கும் அனைவரின் தாகத்தையும் தீர்த்துள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக தாகம் கொண்டிருக்கும் இவ்வுலகின் தாகத்தைத் தீர்க்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தன் தியான உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.