2016-09-21 17:11:00

பல ஐரோப்பிய நாடுகளை உருவாக்கிய பெருமைக்குரியது திருஅவை


செப்.21,2016. அறுபது ஆண்டுகளுக்கு முன், ‘ஐரோப்பிய ஒன்றியம்’ என்று உருவான ஒரு கருத்து வெறும் கனவாகவே உள்ளதா என்ற கேள்வியை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் எழுப்பினார்.

செப்டம்பர் 21,22 ஆகிய இரு நாட்கள், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், திருப்பீட நீதி, அமைதி அவையின் பிரதிநிதியாகவும், அப்போஸ்தலிக்க தூதுவராகவும் பங்கேற்ற பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

‘ஐரோப்பிய ஒருங்கிணைப்பில், கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில், 'ஐரோப்பிய ஒருங்கிணைப்பும், புலம்பெயர்தல் சவாலும்' என்ற தலைப்பில், பேராயர் தொமாசி அவர்கள் உரை வழங்கினார்.

ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளை உருவாக்கிய பெருமை கத்தோலிக்கத் திருஅவைக்கு உள்ளதென்று கூறிய பேராயர் தொமாசி அவர்கள், தற்போது நாம் சந்திக்கும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, நாம் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஓர் உந்து சக்தி என்று சுட்டிக்காட்டினார்.

இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்துள்ள 2 கோடியே 13 இலட்சம் மக்களில் 12 இலட்சம் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது, நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு சவால் என்று பேராயர் தொமாசி அவர்கள் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.