2016-09-22 15:53:00

சிரியா மக்களைப் பந்தாடிவரும் சக்திவாய்ந்த அரசுகள்


செப்.22,2016. உலகின் சக்திவாய்ந்த அரசுகளும், அமைப்புகளும் சிரியா நாட்டை ஒரு விளையாட்டுத் திடலாக மாற்றி, அங்கு வாழும் மக்களை, பந்துகளைப்போல் உதைத்து விளையாடுகின்றனர் என்று, சிரியாவின் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட அமைதி நாள்களையொட்டி, காரித்தாஸ் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு மடலில், சிரியா நாட்டின் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் சிரியாவில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், சிறிதளவு நிம்மதியைத் தந்தது என்றாலும், தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் கொண்டு செல்லும் வேளையில், மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தது அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று, காரித்தாஸ் அதிகாரி, Sandra Awad அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

இன்று சிரியா மக்களுக்கு அமைதி ஒன்றே மிக முக்கியமான தேவை என்று கூறிய Awad அவர்கள், அந்த அமைதியை வழங்க மறுக்கும் உலகச் சக்திகள், நாட்டு மக்களை அநீதமான முறையில் பந்தாடிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்திக் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.