2016-09-22 16:22:00

'நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவு' - கர்தினால் பரோலின்


செப்.22,2016. நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை குறைக்கவும், அழிக்கவும் வழிசெய்யும் முறைகள் இன்று உலகில் பரவி வருவது, மனிதர்கள், மற்றும் பிற உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், கத்தோலிக்கத் திருஅவை மிகுந்த கவலை கொண்டுள்ளது என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. பொது அவையில் தெரிவித்தார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. பொது அவையில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில், செப்டம்பர் 19, இத்திங்கள் முதல் கலந்துகொண்டு, உரையாற்றிவரும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், 'நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவு' (Antimicrobial Resistance) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

"வர்த்தக மற்றும் சுயநல ஆசைகளுக்காக, மனித உடலிலும், ஏனைய உயிர்களிலும் தேவையற்ற வழிகளில் குறுக்கீடுகள் செய்வது, இவ்வுலகை, இன்னும் அழகற்றதாய், வறுமை நிறைந்ததாய் மாற்றிவிடும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.

நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவால் அதிக அளவில் பாதிக்கப்படுவது, கருவில் உள்ள குழந்தைகளும், அதிக நோயினால் வாடுவோரும் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், பிறக்காத குழந்தைகள், நோயுற்றோர், முதியோர் ஆகியோரை வர்த்தக உலகம் ஒரு சுமையாகக் கருதுவது இந்த முயற்சியில் தெளிவாகிறது என்று கூறினார்.

சமுதாயத்திற்கு வழங்கப்படும் நலப்பணிகள், அனைவருக்கும் சமமாக, தரம் மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே, திருப்பீடம் உலக அமைப்புக்களுக்கு முன் வைக்கும் பணிவான வேண்டுகோள் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.