2016-09-22 16:07:00

மதத்தின் பெயரால் வன்முறைகள், கடைசி காலத்தின் அறிகுறிகள்


செப்.,22,2016. மதத்தின் பெயரால் வன்முறைகள் இடம்பெறுவது என்பது, இறுதித் தீர்ப்பு நாள் நெருங்கி வருகிறது என்பதற்கான காலத்தை உணர்த்தும் அடையாளங்கள் என உரைத்துள்ளனர், லெபனனின் பல்சமய தலைவர்கள்.

உலக அமைதிக்காக அனைத்து நாடுகளிலும் பல்சமய செப வழிபாடுகள் இடம்பெறவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்திருந்த விண்ணப்பத்தையொட்டி, லெபனனின் அமைதி, நீதி அவையால் Harissa எனுமிடத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த செபக்கூட்டத்தில் பங்குபெற்ற கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் Druze மதங்களின் 16 உயர்மட்டப் பிரதிநிதிகள், மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள் குறித்து கண்டனத்தை வெளியிட்டனர்.

Harissa மரியன்னை திருத்தலத்தில் இடம்பெற்ற இப்பல்சமய வழிபாட்டில், பங்குபெற்றோர், லெபனனிலும், மத்தியக்கிழக்குப் பகுதியிலும் இணக்க வாழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். Maronite முதுபெரும் தந்தை Bechara Boutros Rai அவர்களும், இவ்வழிபாட்டில், இடையிடையே அமைதிக்கான விண்ணப்பங்களை எழுப்பினார்.

இந்த செப வழிபாட்டின் இறுதியில், கிறிஸ்தவ தலைவர்களுடன், Shiite இஸ்லாமிய மதத்தலைவர் Ahmed Abdel Amir Kabalan, Druze மதப் பிரதிநிதி Sami Aboul Mouna  ஆகியோர் இணைந்து, அமைதிக்கான பொதுச்செபத்தை உரத்த குரலில் செபித்தனர். 

ஆதாரம் : FIDES/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.