2016-09-24 17:08:00

கல்விப் பணியும் இரக்கத்தின் பணியே, - பாகிஸ்தான் ஆயர்


செப்.24,2016. கல்விக்காக ஆற்றப்படும் அனைத்துப் பணிகளும் இரக்கத்தின் பணிகளே, ஏனெனில், கல்விப்பணிகள், தனி மனிதர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு உதவுகின்றன என்றார், பாகிஸ்தான் ஆயர் அர்ஷத் ஜோசப்.

பாகிஸ்தானின் ஃபைசலாபாத் மறைமாவட்டத்தில் சிறப்பிக்கப்படும் கல்வியாண்டு குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட ஆயர் ஜோசப் அவர்கள், திரு அவையில் கொண்டாடப்படும் இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கு இயைந்த வகையில், ஃபைசலாபாத் மறைமாவட்டம் கல்வி ஆண்டைச் சிறப்பிக்கின்றது என்றார்.

மறைமாவட்டத்தின் கத்தோலிக்கப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தவும்,  கல்வி கற்பதிலும் போதிப்பதிலும் ஆர்வத்தை வளர்க்கவும், இந்த கல்விக்கான சிறப்பு ஆண்டு கொண்டாடப்படுகிறது என்று கூறிய ஆயர், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களைச் சென்று சந்திப்பதை இவ்வாண்டில் தன் முக்கியப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

கல்வி அனைவருக்கும் கிட்டவேண்டும் என்ற கருத்தை பெற்றோர், மற்றும், ஆசிரியர்கள் மத்தியில் ஊக்குவிக்கவேண்டியது, இச்சிறப்பு ஆண்டின் நோக்கங்களுள் ஒன்றாக இருக்கும் எனவும் கூறிய ஆயர் ஜோசப்  அவர்கள், ஏழைகளுக்கும், உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும், முன்னுரிமை கொடுப்பது, கத்தோலிக்கக் கல்வி நிலையங்களின் கடமையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.