2016-09-24 17:41:00

மலேசிய பொருளாதாரத்தில் குடியேற்றதாரரின் பங்களிப்பு அதிகம்


செப்.24,2016. மலேசியாவில் வாழும் குடியேற்றதாரப் பணியாளர்களால், நாட்டின் பொருளாதாரம் நன்முறையில்  பயனடைந்துள்ளது என்பது குறித்து எவரும் பேச முன்வருவதில்லை என, தன் அறிக்கையில் கூறியுள்ளது, அந்நாட்டின் ஆயர் பேரவையின் குடியேற்றதாரருக்கான மறைப்பணி அவை.

மலேசியா திருஅவையின் குடியேற்றதாரர் அவை இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கும் குடியேற்றதாரர் நாளையொட்டி, செய்தி வெளியிட்டுள்ள அவ்வவையின் தலைவர், ஆயர் பெர்னார்டு பால் அவர்கள், மலேசிய பொருளாதாரம், குடியேற்றதாரர்களின் பங்களிப்பையும் சார்ந்திருக்கிறது என்பதை மனதில் கொண்டவர்களாக, அவர்களைக் குறித்த நம் பார்வை இருக்க வேண்டும் என்றார்.

வெளிநாட்டிலிருந்து வந்து, மலேசியாவில் குடியேறி பணியாற்றும் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலிலும், உற்பத்தி நிலையங்களிலும், விவசாயத்திலும், தோட்டத்தொழிலிலும், வீடுகளிலும், பணிபுரிவதாக உரைத்த ஆயர், இவர்களை நாம் நம் அண்டை வீட்டாராக ஏற்றுள்ளோமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

மலேசிய நாட்டவரின் குழந்தைகள் பல, தற்போது, வெளிநாடுகளில் கல்வி பயிலும் சூழலில், அக்குழந்தைகள் நன்முறையில் நடத்தப்படவேண்டும் என, மலேசியர்கள் எதிர்பார்ப்பதுபோல், மலேசியாவில் வாழும் குடியேற்றதாரர்களும் நடத்தப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையானதே எனவும், தன் அறிக்கையில் கூறியுள்ளார் ஆயர் பெர்னார்டு பால். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.