2016-09-27 16:48:00

அகில உலக இயேசு சபையினரின் 36வது பொதுப் பேரவை


செப்.27,2016. அக்டோபர் 03, வருகிற திங்களன்று உரோம் நகரில் தொடங்கும் அகில உலக இயேசு சபையினரின் 36வது பொதுப் பேரவை குறித்த விபரங்கள், இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

தூய இலொயோலா இஞ்ஞாசியாரின் 30வது வழித்தோன்றலான தலைவர், இப்பொதுப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவர் உடனடியாக திருத்தந்தைக்கு அறிவிக்கப்படுவார் என்றும், இத்தேர்தலுக்கு திருத்தந்தையின் அங்கீகாரம் அவசியம் இல்லை என்றும், இக்கூட்டத்தில் தெரிவித்தார் இயேசு சபை அருள்பணியாளர் ஒர்லாந்தோ தோரெஸ்.

அகில உலக இயேசு சபைத் தலைவர், திருப்பீடத்திற்கும், அகில உலக இயேசு சபையினருக்கும் இடையே உறவின் பாலமாகச் செயல்படுவார் என்றும், கூறினார் அருள்பணியாளர் தோரெஸ்.  

36வது பொதுப் பேரவையில், உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 215 பிரதிநிதிகள் பங்கெடுப்பார்கள். இவர்களில் 72 பேர், ஆசியா மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்தவர்கள். மேலும், இந்த 215 பேரில் 212 பேர், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் ஆவர்.   

தூய இலொயோலா இஞ்ஞாசியாரால் ஆரம்பிக்கப்பட்டு, 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, திருத்தந்தை 3ம் பவுல் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட இயேசு சபையின் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

“ஆழத்திற்குப் படகைச் செலுத்துங்கள்” என்ற தலைப்பில், 36வது பொதுப் பேரவை, உரோம், அகில உலக இயேசு சபை தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.