2016-09-27 16:46:00

அணு ஆயுதங்கள் போலியான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கின்றன


செப்.27,2016. அணு ஆயுதங்கள் போலியான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கின்றன மற்றும், அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த வாக்குறுதிகள், ஒரு துன்பகரமான மாயத்தோற்றமாகும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அணு ஆயுதங்களை முழுவதும் ஒழிக்கும் உலக நாளான, செப்டம்பர் 26, இத்திங்களன்று, ஐ.நா.வில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

அணு ஆயுதங்கள் ஒருபோதும், உறுதியான மற்றும் பாதுகாப்பான உலகை உருவாக்க இயலாது என்றும் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், உலகளாவிய அமைதியும், நிலையான தன்மையும், அணு ஆயுதங்களை முழுவதும் ஒழிப்பது குறித்த வாக்குறுதியில் ஏற்படாது என்பதையும் நினைவுபடுத்தினார்.

மேலும், இந்த உலக நாளன்று பேசிய, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், உலகம் எதிர்கொண்டுவரும் அணு ஆபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி, அணு ஆயுதங்கள் முழுமையாய் இரத்து செய்யப்படுவதற்கு அழைப்பு விடுத்தார்.

அனைத்து அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இதுவரை 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, ஆனால், 166 நாடுகளே இதை அமல்படுத்த முன்வந்துள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.