2016-09-27 16:33:00

கொலம்பிய அமைதி ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்கத் திருஅவை பாராட்டு


செப்.27,2016. கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சியாளர்களுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதற்கு, கத்தோலிக்கத் திருஅவையின் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்திங்களன்று, கொலம்பியாவின் கார்த்தஜேனாவில், இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையொட்டி, அந்நகரில் நன்றித் திருவழிபாடு நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், அந்நாட்டில், நல்லிணக்கம் மற்றும் ஒப்புரவைக் கொண்டுவருவதற்கு, அண்மை ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவந்த முயற்சிகளை, திருத்தந்தை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்ததோடு, அவற்றை ஊக்கப்படுத்தியும் வந்தார் என்று தெரிவித்தார்.  

இந்த அமைதி ஒப்பந்தம், உள்நாட்டுப் போரில் மனிதமிழந்த மற்றும் ஒடுக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் வேதனையைக் குறைத்து, வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்,  கர்தினால் பரோலின்.

அதேநேரம், வலிமையும், நீதியும் நிறைந்த வருங்காலத்தை அமைப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், கொலம்பியாவில் அமைதி நிலவுவதற்கு மதங்களின் முக்கிய பங்கையும் கோடிட்டுக் காட்டினார்.

கொலம்பியாவில் இடம்பெற்ற, 52 வருட உள்நாட்டுப் போரில், இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும், அறுபது இலட்சத்துக்கு அதிகமானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

இது, தென் அமெரிக்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.