2016-09-27 15:20:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 41


செப்டம்பர் 28, இப்புதனன்று, 'பசியிலிருந்து விடுதலை பெறும் நாள்' உலகின் பல நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது. பசி என்ற அரக்கனை, இவ்வுலகிலிருந்து, முற்றிலும் விரட்டியடிக்கமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்த, 2006ம் ஆண்டு முதல், இந்த உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த முயற்சியைத் துவக்கியவர்கள் உருவாக்கியுள்ள ஒரு வலைத்தளத்தில், (https://www.freedomfromhunger.org) உலகில் பசி நிலவுவதற்கு 5 காரணங்களைக் கூறியுள்ளனர். முதல் காரணம், நம் அனைவருக்கும் தெரிந்த காரணம், அதாவது, வறுமை. 2வது காரணம், ஆயுதம் தாங்கிய போர்கள் என்று கூறப்பட்டுள்ளது. போர்களின் விளைவாக உருவாகும் பசிக்கொடுமையையும், இவ்வுலகை ஆக்கிரமித்துள்ள போர்வெறி என்ற தீய ஆவியை எவ்விதம் விரட்ட முடியும் என்பதையும் இன்றைய விவிலியத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.

இன்று நடைபெற்று வரும் போர்களில், உள்ளத்தை துன்புறுத்தும் ஓர் அநீதி தொடர்ந்து இடம்பெறுகிறது. அதாவது, இப்போர்களைத் துவக்கியவர்கள், தொடர்பவர்கள், எவ்வித பாதிப்பும் இன்றி, பாதுகாப்பாக வாழ்கின்றனர். ஆனால், இந்த போருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள், குறிப்பாக, குழந்தைகள், உணவின்றி, நீரின்றி, வீடின்றி, உறவுகளைப் பறிகொடுத்து வாழ்கின்றனர். ஏமன் நாட்டில் நிலவிவரும் போரினால், குழந்தைகள், ஊட்டச்சத்து ஏதுமின்றி துன்புறுகின்றனர் என்ற செய்தி சென்ற வாரம் வெளியானது. சிரியாவில், பக்ரீத் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம், ஒரு சில நாட்களே நீடித்தது என்பதையும், தற்போது அங்கு வல்லரசுகளுக்கிடையே உருவாகியுள்ள மோதல்களால், அலெப்போ நகரில் நீர் வசதி முற்றிலும் தடைபட்டுள்ளது என்றும் அறிகிறோம்.

போரின் விளைவாக உணவின்றி, நீரின்றி மக்கள் துன்புறுவதைச் சிந்திக்கும்போது, 'பசி, ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கூறியது, நினைவுக்கு வருகிறது. இவ்வாண்டு, ஜூன் 13ம் தேதி, ஐ.நா.வின், உலக உணவு திட்டம் (World Food Programme) அலுவலகத்தில், திருத்தந்தை வழங்கிய உரையில், போருக்கும், பசிக்கும் உள்ள தொடர்பு குறித்து, தெளிவாகவும், கடுமையாகவும் பேசினார்:

"இன்று, உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் மோதல்களைத் தீர்க்க, பேச்சு வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதைவிட, போர்க்கருவிகளே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுகள், போராடும் குழுக்கள், பன்னாட்டு அமைப்புக்கள், அனைத்தும், ஆயுதங்களை அதிகம் சார்ந்திருப்பதால், போர்க்கருவிகள், நாடுவிட்டு நாடு கொண்டு செல்லப்படுவதற்கு தடைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், போர் நிலவும் நாடுகளில், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வதற்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

போரிடும் குழுக்களின் கொள்கைகளில் உள்ள வேறுபாட்டினால், ஐ.நா.அவை, செஞ்சிலுவை சங்கம் போன்ற உலக அமைப்புக்கள், உணவு, மற்றும் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்வதற்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், இலாபம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டுள்ள ஆயுத வர்த்தகர்கள் உருவாக்கும் போர்க்கருவிகள், நாடுகளிடையே சுதந்திரமாக வலம் வருகின்றன.

இதன் விளைவாக, போர் என்ற அரக்கனுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது; ஆனால், அவ்வரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை. சில வேளைகளில், மக்களின் பசியே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

கெரசேனர் பகுதியில், ஒரு மனிதர், தீய ஆவிகளால் ஆக்ரமிக்கப்பட்டதைப் போல், இன்றைய உலகில், அரசுகளும், அடிப்படைவாதக் குழுக்களும், அவற்றிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களும் போர் வெறி என்ற தீய ஆவியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளனர் என்று, எழுத்தாளரும், அருள் பணியாளருமான ஜான் டியர் (John Dear) என்பவர் கூறியுள்ளார். "Expelling the demons of war" அதாவது, "போர் என்ற பேய்களை விரட்டுதல்" என்ற தலைப்பில், அவர் எழுதியுள்ள கட்டுரை, நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வரும் புதுமையை, மற்றொரு கோணத்தில் சிந்திக்க உதவுகிறது.

அடுத்த நாடுகளை ஆக்கிரமிக்க, தங்கள் நாட்டு இராணுவத்தை அனுப்பும் வல்லரசுகளுக்கு, இறைவன் தரும் பதில்போல இப்புதுமை அமைந்துள்ளது என்றும், அந்நிய நாடான உரோமையின் ஆக்கிரமிப்பில் துன்புற்ற இஸ்ரயேல் நாட்டில் பிறந்து, வளர்ந்து, பணியாற்றிய இயேசு, உரோமைய ஆக்கிரமிப்பிற்கு தரும் பதிலே, தீய ஆவியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒருவரை விடுவித்த இப்புதுமை என்றும் அருள்பணி ஜான் டியர் அவர்கள் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.

இப்புதுமை நிகழ்ந்த சூழலை தன் கட்டுரையின் துவக்கத்தில் அழகாகச் சித்திரித்துள்ளார், ஆசிரியர். இயேசு, இப்புதுமையை, தனக்குப் பழக்கமான கலிலேயப் பகுதியில் ஆற்றவில்லை. ஆனால், 'கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதி'யில் (மாற்கு 5:1) ஆற்றுகிறார். இயேசு, தன் சீடர்களுடன் இப்பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதை, மாற்கு நற்செய்தி, 4ம் பிரிவில், (4:3541) வாசிக்கிறோம்.

"அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" (மாற்கு 4,35) என்று இயேசு அழைத்ததும், சீடர்கள் மனதில் கலக்கம் தோன்றியிருக்க வேண்டும். பழக்கமில்லாத இடம், வேற்றினத்தைச் சேர்ந்த மக்கள் என்ற எண்ணங்கள், சீடர்களிடம் கலக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டும். சீடர்களின் உள்மன போராட்டத்தின் எதிரொலிபோல், அவர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தில், புயலொன்று எழுந்தது (மாற்கு 4: 37-38). சீடர்களின் உள்ளங்களிலும், கலிலேயக் கடலிலும் உருவான புயல்களை அடக்கி, இயேசு, கெரசேனர் பகுதியில் காலடி வைக்கிறார்.

இயேசு கெரசேனர் பகுதிக்கு வந்துள்ளார் என்பதை, மக்கள் உணர்வதற்குமுன், தீய ஆவி உணர்ந்தது. கல்லறையிலிருந்து வெளியேறிய அந்த மனிதர் வழியே, தீய ஆவி இயேசுவைச் சந்தித்தது. தான் ஆக்கிரமித்துள்ள ஒரு பகுதியில் 'இயேசுவுக்கு என்ன வேலை?' (மாற்கு 5:7) என்ற கேள்வியுடன், தீய ஆவி, அவரை, அங்கிருந்து விரட்ட முயன்றது. இயேசுவுக்கும், தீய ஆவியால் ஆக்கிரமிக்கப்பட்ட மனிதருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில், தன் பெயர், 'இலேகியோன்' என்று தீய ஆவி அறிமுகப்படுத்தியது. இது குறித்து, அருள்பணி ஜான் டியர் அவர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளார். 'இலேகியோன்' என்பது, உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு என்பதை அறிவோம். அந்த 'இலேகியோனை' கெரசேனர் பகுதியிலிருந்து வெளியேற்றும் புதுமை வழியே, இயேசு, உரோமைய ஆக்கிரமிப்பை அகற்றுகிறார் என்று கட்டுரையாளர் விளக்கம் தந்துள்ளார்.

அம்மனிதரிலிருந்து வெளியேறிய ஆவிகள், பன்றிகளுக்குள் நுழைந்து, அவை கடலில் மூழ்கின என்பதைக் குறித்து பேசும் அருள்பணி ஜான் டியர் அவர்கள், யூதேயா பகுதியை ஆக்கிரமித்திருந்த உரோமைப் படையின் சின்னமாக இருந்தது 'பன்றி' என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பன்றிகள் கடலில் மூழ்கியதைப்போல், உரோமைய ஆக்கிரமிப்பும் அழியும் என்பதை இயேசு இப்புதுமையில் வெளிப்படுத்தியுள்ளார். ஆக்கிரமிக்கும் எந்த சக்தியையும் விரட்டியடித்து, மக்களை விடுவிப்பதே, இயேசு கொணர்ந்த இறையரசின் முக்கியப்பணி என்பது, இப்புதுமையில் வெளியானது என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இப்புதுமையினால் ஒருவர் குணம் பெற்றதையும், ஏறத்தாழ 2000 பன்றிகளை தாங்கள் இழந்ததையும் கண்ட மக்கள், இயேசுவை தங்கள் பகுதியைவிட்டு போய்விடும்படி விடுத்த விண்ணப்பத்தை, கட்டுரை ஆசிரியர், ஜான் டியர் அவர்கள், இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்.

ஆயுத உற்பத்தி, அணு ஆயுத ஆய்வு ஆகிய கொடுமைகள் வழியே, 'போர்' என்ற பேய், இவ்வுலகை இவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பதைத் தடுக்க, பல்வேறு அமைப்புக்கள் முயன்றுவருகின்றன என்பதை, அருள்பணி ஜான் டியர் அவர்கள், எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார். ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களே, அந்த முயற்சிகளுக்கு எதிராக செயலாற்றுவது, இயேசுவை தங்கள் பகுதியை விட்டு போய்விடுமாறு கூறும் கெரசேனர் மக்களை ஒத்திருக்கிறது என்று அருள்பணி ஜான் டியர் அவர்கள், தன் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறார். இவ்வுலகை ஆக்கிரமித்துள்ள 'போர்' என்ற தீய ஆவியை விரட்டி, இறைவன் உலகை குணமாக்கும் புதுமைக்கு ஒரு முன்னோடியாக, கெரசேனர் பகுதியில் தீய ஆவிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருவரை, இயேசு குணமாக்கியப் புதுமையைக் காணலாம் என்று அருள்பணி ஜான் டியர் அவர்கள் தன் கட்டுரையை நிறைவு செய்கிறார்.

'பசியிலிருந்து விடுதலைபெறும் நாளை'யும் போரையும் இணைத்து, நம் தேடலைத் துவக்கினோம். அதையொத்த எண்ணங்களுடன் நம் தேடலை நிறைவு செய்வோம். அரசுத் தலைவர்களாக பணியாற்றிய இருவர், போர்க்கருவிகளையும், பசியையும் இணைத்துப் பேசியிருப்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றது:

"செல்வமும், அதிகாரமும் மிகுந்தவர்களிடம், தொழில்நுட்பம் மிகுந்த ஆயுதங்கள் குவியும்போது, எழுத்தறிவற்றவர்கள், நோயுற்றோர், வறியோர், பசித்திருப்போர் அனைவரையும் இவ்வாயுதங்கள் கொல்லமுடியும். ஆனால், எழுத்தறிவின்மை, நோய், வறுமை, பசி ஆகியவற்றை இவ்வாயுதங்கள் கொல்லமுடியாது" என்று சொன்னவர், கியூபா நாட்டின் அரசுத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள ஃபிடெல் காஸ்ட்ரோ (Fidel Castro).

"உருவாக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், இயக்கப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், ஏவப்படும் ஒவ்வொரு இராக்கெட்டும், இறுதியில் பார்க்கப்போனால், ஒரு திருட்டுதான். உணவின்றி பசித்திருப்போரிடமிருந்தும், ஆடையின்றி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்போரிடமிருந்தும் திருடப்பட்டவை" என்று சொன்னவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் டுவைட் ஐசனோவர் (Dwight Eisenhower).

வறியோரிடமிருந்து திருடப்படுவதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரைகளில் ஒருமுறை பேசியபோது, “இவ்வுலகில் உணவு இல்லை என்பது, பசிக்குக் காரணம் அல்ல, மாறாக, நாம் வீசியெறியும் உணவே இவ்வுலகின் பசிக்கு முக்கியக் காரணம்” என்று கூறியத் திருத்தந்தை, "குப்பையில் எறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு" என்பதை வலியுறுத்திக் கூறினார்.

தனிப்பட்ட முறையில், நாம் ஒவ்வொருவரும் குப்பையில் எறியும் உணவு, வறியோரின் பசி போக்க பயன்படுத்தப்பட வேண்டிய உணவு. அதேபோல், போர்க்களம் என்ற குப்பைமேட்டை உருவாக்கி, அங்கு, ஆயுதங்கள் என்ற குப்பையை, அரசுகள், அளவுக்கதிகமாக குவித்து வருவதால், வறியோரின் பசி தீராமல் உள்ளது.

போர் என்ற தீய ஆவியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அரசுகளும், ஆயுத உற்பத்தியாளர்களும், தங்கள் சுயநல பசியிலிருந்து மீண்டு வரவேண்டுமென்று மன்றாடுவோம். போர் என்ற அரக்கனின் கட்டுக்கடங்காத பேராசைப் பசியினால், மக்களை வாட்டி வதைக்கும் உண்மையான உடல் பசியைப் போக்க, செப்டம்பர் 28 கடைபிடிக்கப்படும் 'பசியிலிருந்து விடுதலைபெறும் நாள்' நம் அனைவருக்கும் தெளிவையும், துணிவையும் வழங்க இறைவனிடம் வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.