2016-09-28 16:56:00

36வது பொதுப் பேரவை குறித்து அருள்பணி லொம்பார்தி பேட்டி


செப்.28,2016. அகில உலக இயேசு சபையின் பிரதிநிதிகள், உரோம் நகரில் கூடிவரும் வேளையில், இச்சபையின் உலகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு பயன்படுத்தும் "murmuratio" என்ற வழிமுறை, மிகுந்த பலன்தரும் ஒரு வழிமுறை என்று, இயேசு சபையின் உதவித் தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றும், அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

அக்டோபர் 2ம் தேதி மாலை முதல், உரோம் நகரில் நடைபெறவிருக்கும் இயேசு சபையின் 36வது பொதுப் பேரவை குறித்து, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் விவரங்கள் அளித்த, அருள்பணி லொம்பார்தி அவர்கள், பின்னர், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இந்தப் பொது பேரவையில், இயேசு சபையின் அகில உலகத் தலைவர் தேர்தெடுக்கப்படும் முறை குறித்துப் பேசினார்.

தலைவரின் தெரிவு குறித்து பொது அவையில் விவாதங்கள் மேற்கொள்ளும்போது, அங்கு கட்சி மனப்பான்மை உருவாக வாய்ப்புண்டு என்பதால்,  பிரதிநிதிகள் மேற்கொள்ளும் "murmuratio" வழிமுறையில், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, விவரங்கள் அறிந்து, தங்கள் எண்ணங்களின் மீது செபித்து, தலைவரைத் தேர்ந்தெடுப்பதை, ஓர் ஆன்மீக வழிமுறையாக, இயேசு சபையினரால் திறம்பட நடத்தப்பட்டுள்ளது என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

மேலும், இயேசு சபையின் விதிமுறைகளின்படி அகில உலகத் தலைவரின் பணி வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடும் என்றாலும், கடந்த மூன்று உலகத் தலைவர்கள், தங்கள் வயது, உடல்நிலை இவற்றை மனதில் கொண்டு பணிமாற்றம் கோரினர் என்பதையும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.