2016-09-29 16:16:00

புதிய கேள்விகள், இயேசு சபைக்குமுன் சவால்களாக வைக்கப்படும்


செப்.29,2016. இயேசு சபையைச் சேர்ந்த ஒருவர் திருத்தந்தையாக இருக்கும்போது, இயேசு சபையினரின் 36வது பொதுப் பேரவை நடைபெறுவது, இச்சபையின் வரலாற்றில் முதல்முறை என்று, உரோம் நகரில் இயங்கிவரும் Civilta Cattolica இதழின் ஆசிரியராகப் பணியாற்றும் அருள்பணி அந்தோனியோ ஸ்பதாரோ (Antonio Spadaro) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

திருத்தந்தையின் கட்டளைகளை ஏற்று, உலகின் பல பகுதிகளுக்கும் செல்வதற்கென புனித இலொயோலா இஞ்ஞாசியாரால் உருவாக்கப்பட்ட இயேசு சபை, இன்றைய உலகில் சவால்கள் நிறைந்த பகுதிகளுக்குச் சென்று பணியாற்றுவது குறித்து, இந்தப் பொதுப் பேரவை சிந்திக்கவிருப்பதாக, அருள்பணி ஸ்பதாரோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களிலிருந்து அதிகமான பிரதிநிதிகள் இப்பொதுப் பேரவையில் பங்கேற்பது குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அருள்பணி ஸ்பதாரோ அவர்கள், திருஅவையை புதிய கோணங்களில் புரிந்துகொள்ள, இந்த கண்டங்களிலிருந்து வருபவர்கள் உதவுவார்கள் என்றும், இதனால், புதிய பல கேள்விகள், இயேசு சபைக்குமுன் சவால்களாக வைக்கப்படும் என்றும் கூறினார்.

துவங்கவிருக்கும் 36வது பொதுப் பேரவையில் இன்றையத் தொடர்பு உலகின் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அருள்பணி ஸ்பதாரோ அவர்கள், தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இந்த அனுபவம், தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்கு ஒப்படைக்கப்பட்ட ஓர் ஆன்மீக அனுபவமாக இருக்கும் என்பதில் தனக்கு எவ்வித ஐயமும் இல்லை என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.