2016-09-29 16:06:00

போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு


செப்.29,2016. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில், பிலிப்பீன்ஸ் தலத் திருஅவையும் அரசும் இணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளதென ஆசிய செய்தி கூறுகிறது.

இந்தக் கொடிய பழக்கத்திற்கு அடிமையானவர்கள், உடலளவிலும், மனதளவிலும் பெறக்கூடிய பல உதவிகளுடன், ஆன்மீக அளவில் பெறக்கூடிய உதவிகளைச் செய்வதற்கு திருஅவை தயாராக உள்ளது என்று, Cagayan de Oro என்ற உயர் மறைமாவட்டத்தின் பேராயர், அந்தோனியோ லெதேஸ்மா (Antonio Ledesma) அவர்கள் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பயன்பாடு, வர்த்தகம் என்ற பிரச்சனைகளைத் தீர்க்க அண்மைய மாதங்களில் அரசு மேற்கொண்ட வன்மையான நடவடிக்கைகளைக் கண்டனம் செய்த பேராயர் லெதேஸ்மா அவர்கள், ஒரு குற்றத்தை, மற்றொரு குற்றத்தால் தீர்க்கமுடியாது என்று சுட்டிக்காட்டினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவராக, Rodrigo Duterte அவர்கள் பொறுப்பேற்ற பின், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக, 3000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், உண்மையான எண்ணிக்கை இதைவிட இருமடங்கு இருக்கலாம் என்றும் ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews/CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.