2016-09-30 17:00:00

ஜார்ஜியா, ஒரு கண்ணோட்டம்


செப்.30,2016. ஜார்ஜியா, கருங்கடலின் கிழக்குக் கரையில், கவ்காசுஸ் பகுதியில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் அர்மேனியா, கிழக்கே அஜர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது. முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த இந்நாடு, 1991ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி, அதிலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்து, டிசம்பர் 25ம் தேதி இறுதியாக முடிவு செய்தது. ஜார்ஜியாவின் பாதுகாவலர்கள், புனித ஜார்ஜ், அன்னை மரியா. ஜார்ஜியாவில், 90 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். 2.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 9.9 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். இன்னும், அர்மேனிய கிறிஸ்தவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர், யூதர்கள் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரும் உள்ளனர். அந்நாட்டின் பெரும்பாலான கத்தோலிக்கர், தலைநகர் திபிலிசியில் வாழ்கின்றனர். குரா (Kura) நதிக்கரையில் அமைந்துள்ள திபிலிசி நகர், ஜார்ஜிய அரசுக்குத் தலைநகராக, 458ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் செல்லும் வழியில் இந்நகரம் அமைந்துள்ளதால், இது, காலப்போக்கில் பல இனத்தவரின் ஆக்ரமிப்புக்கு உள்ளானது. பெர்சியர்கள், பைஜான்டைன் அரசுகள், அரேபியர்கள், மங்கோலியர்கள், பின்னர், 1801ம் ஆண்டில், இரஷ்யர்கள் இந்நகரை ஆட்சி செய்தனர். இவ்வாறு, நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள இந்நகரில் தற்போது வாழ்கின்ற, ஏறத்தாழ 15 இலட்சம் மக்களில், பெரும்பாலானோர் கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.