2016-09-30 16:07:00

ஜார்ஜியா அரசுத்தலைவர் இல்லத்தில் திருத்தந்தையின் உரை


செப்.30,2016. அன்பு அரசுத் தலைவரே, அரசு அதிகாரிகளே, மதிப்பிற்குரியவர்களே,

செறிவு மிகுந்த கலாச்சாரங்களைக் கொண்டுள்ள இந்நாடு, 4ம் நூற்றாண்டு முதல், புனித நீனோவின் போதனைகளால் கிறிஸ்தவத்திலும் வேரூன்றி வளர்ந்துள்ளது.

ஜார்ஜியா நாடு, ஐரோப்பாவிற்கும், ஆசியாவுக்கும் இடையே அமைந்துள்ளதால், இவ்விரு கலாச்சாரங்களுக்கும் ஒரு பாலமாகவும் இருந்து வந்துள்ளது. சுதந்திரமாக விண்ணைநோக்கி உயர்ந்திருக்கும் மலைகள், உங்கள் நாட்டிற்கு ஓர் அடையாளமாக விளங்குகின்றன.

அரசுத்தலைவரே, ஜார்ஜியா நாடு விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பெருமளவில் நிகழ்ந்த தியாகங்கள் வழியே, உங்கள் நாடு, மக்களாட்சியை நிறுவியுள்ளது. அமைதியையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்ய, இந்நாட்டின் அனைத்துத் துறைகளும் இணைந்து செயலாற்றும் என்று நம்புகிறேன்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் அனைத்து மக்களும், அமைதியில் இணைந்து வாழ்வதே, நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும். வன்முறை நிறைந்த அடிப்படைவாதம், உலகின் பல பகுதிகளில் வளர்ந்துவரும் சூழலில், நாகரீகமான கலந்துரையாடல் என்ற பண்பை வளர்த்துக்கொள்வது, மிகவும் அவசியம்.

வன்முறைகளை வளர்க்கும் வேற்றுமைகளைத் தடுப்பதற்கு, மனிதர்களுக்கு முதலிடம் கொடுக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும். இனம், மொழி, அரசியல் கோட்பாடு, மதம் என்று பல வழிகளில் நாம் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒருவரை ஒருவர் இன்னும் செறிவு மிக்கவர்களாக மாற்ற, நம் வேறுபாடுகளை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். மக்களின் உண்மையான நலனை மனதில் கொண்டு, உறுதியான உள்ளத்துடன் மக்களை இணைத்து முன்னேறுவது, அரசு அதிகாரிகளின் முக்கியக் கடமை.

மக்களின் நலனில் என்றுமே அக்கறை கொண்டுள்ள கத்தோலிக்கத் திருஅவை, மனிதநல முன்னேற்றம், பிறரன்புப் பணி ஆகியவை வழியே, ஜார்ஜியா மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்கிறது. இந்நாட்டின் அமைதிக்கும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும், திருஅவை, தன் கடமைகளை மீண்டும் அர்ப்பணிக்கிறது.

கிறிஸ்தவப் பாரம்பரியத்தின் சாட்சிய வாழ்வில் இணைந்து, ஜார்ஜியா ஆர்த்தடாக்ஸ் சபையோடும், ஏனைய மதத்தவரோடும் உரையாடலை வளர்க்க, திருஅவை, தன் அர்ப்பணத்தைப் புதுப்பிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.