2016-09-30 16:45:00

ஜார்ஜியாவில் திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகள்


செப்.30,2016. “மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகிய இவையே அமைதியின் வார்த்தைகள். நாம் பல போர்கள் நடைபெறும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எனவே அமைதிக்காகச் செபிப்போம், இந்த அமைதியை, நம் சொந்தக் குடும்பங்களிலிருந்து தொடங்குவோம், போர் ஒருபோதும் வேண்டாம், இனிமேல் ஒருபோதும் போர் வேண்டாம்” என்றெல்லாம், உலகில் அமைதி நிலவ அடிக்கடி குரல் எழுப்பிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவ்காசுஸ்(Caucasus) பகுதியில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில், அப்பகுதியின், ஜார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளுக்கு தனது மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை, இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்கு உரோம் நகரிலிருந்து தொடங்கியுள்ளார். முன்னாள் சோவியத் யூனியன் பகுதியான இதே கவ்காசுஸ் பகுதி நாடான அர்மேனியாவுக்கு, கடந்த ஜூன் 24,25,26 தேதிகளில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, அதே பகுதிக்கு மீண்டும் ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளார். மேலும், “ஜார்ஜியா, மற்றும் அஜர்பைஜானுக்கு இன்று புறப்படுகிறேன். இவ்வேளையில் செபத்தின் வழியாக, என்னோடு உடன்வாருங்கள். அதன் வழியாக, நாம் ஒன்றுசேர்ந்து, அமைதி, ஒற்றுமை மற்றும் ஒப்புரவை விதைக்க முடியும்” என்ற வார்த்தைகளும், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளன. இவ்வெள்ளி, உரோம் உள்ளூர் நேரம், காலை ஒன்பது மணிக்கு, அதாவது, இந்திய நேரம், பகல் 12.30 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல் இத்தாலியா A321 விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை, தான் வழியில் கடந்து செல்லும், இத்தாலி, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, மொந்தெநெக்ரோ, செர்பியா, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு, தன் செபமும், வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்திகளையும் அனுப்பினார். நான்கு மணிநேரம் விமானப் பயணம் செய்து, ஜார்ஜியத் தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi), அந்நாட்டு நேரம் மாலை 3 மணிக்குச் சென்றடைந்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜார்ஜியத் தலைநகர் திபிலிசியை அடைந்த திருத்தந்தைக்கு, அரசு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. ஜார்ஜிய அரசுத்தலைவர் Georgi Margvelashvili, அவரது துணைவியார், முதுபெரும் தந்தை 2ம் இலியா (Ilia II) உட்பட பல முக்கிய தலைவர்கள் விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்று, மரியாதை நிமித்தம் அரசுத்தலைவரைச் சந்தித்தார். அங்கு, முதல் தளத்தில் உள்ள ஓர் அறையில், திருத்தந்தையும், அரசுத்தலைவரும் தனியே உரையாடினர். இரக்கத்தின் யூபிலி ஆண்டுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Misericordiae Vultus – இரக்கத்தின் திருமுகத்தைக் குறிக்கும், கடினமான பொருள்மீது, அழகாக செதுக்கப்பட்ட படம் ஒன்றை, திருத்தந்தை, அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார். Maestro Patrizio Di Sciullo அவர்களால் வடிவமைக்கப்பட்ட இப்படம், உரோம் நகரின் ஏழு ஆலயங்களில் திருப்பயணிகள் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜிய அரசுத்தலைவரைச் சந்தித்த திருத்தந்தை, அம்மாளிகையில், அரசியல், சமய மற்றும் தூதரக அதிகாரிகள், இன்னும், பொதுமக்கள் மற்றும் கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏறக்குறைய 400 பேராச் சந்தித்தார். இந்நிகழ்வில் ஜார்ஜிய அரசுத்தலைவர் Margvelashvili, முதலில் வரவேற்புரை நிகழ்த்தினார்.பின்னர், திருத்தந்தையும் அந்நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.

இச்சந்திப்பை நிறைவு செய்த பின்னர், அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் இலியா அவர்களின் மாளிகை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். நுழைவாயிலிலே நின்று திருத்தந்தையை அன்போடு வரவேற்றார் முதுபெரும் தந்தை 2ம் இலியா. பின்னர் இவ்விருவரும் அம்மாளிகையில் தனியே சந்தித்துப் பேசினர். நல்வரவேற்புக்கு அடையாளமாக, காப்பியும், தேனீரும் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டன. பின்னர், முதுபெரும் தந்தை 2ம் இலியா அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். பின்னர், திருத்தந்தையும் உரை வழங்கினார். பின்னர் பரிசுப் பொருள்களும் கொடுக்கப்பட்டன. தூய பவுலடிகளார் பிறந்ததன் இரண்டாயிரமாம் யூபிலி ஆண்டின் நினைவாக வெளியிடப்பட்ட, 424 பக்கங்கள் கொண்ட முதல் தொகுப்பை, முதுபெரும் தந்தை 2ம் எலியா அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை. இச்சந்திப்புக்குப் பின்னர், திபிலிசி நகரின் புனித சீமோன் பார் சாபே ஆலயத்தில், அசீரிய-கல்தேய சமூகத்தைச் சந்தித்தார் திருத்தந்தை. இங்கு நடந்த செப வழிபாட்டில், அமைதிக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செப வழிபாட்டை முடித்து வெளியே வந்த திருத்தந்தை, அமைதியைக் குறிக்கும் விதமாக, புறா ஒன்றைப் பறக்கவிட்டார். பின்னர், அங்கிருந்து திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். இத்துடன் ஜார்ஜிய நாட்டுக்கான அவரின் முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. அப்போது இந்திய நேரம் இரவு 8 மணி 15 நிமிடங்களாக இருந்தது.  அன்பு நேயர்களே, ஜார்ஜியாவில் இச்சனிக்கிழமையன்று திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, இஞ்ஞாயிறன்று அஜர்பைஜான் செல்வார் திருத்தந்தை. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அஜர்பைஜானில், திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, இஞ்ஞாயிறு இரவு 10 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளது போல், நாமும் உலகில் அமைதி நிலவச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.