2016-10-02 15:39:00

இது இரக்கத்தின் காலம் : இதயத்தில் சுரக்கும் இரக்கம்


ஒருசமயம் ஜென் துறவி கோபோ அவர்கள், கொளுத்தும் வெயிலில் ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் தாகம் எடுக்கவே, அருகில் தெரிந்த ஒரு வீட்டின் முன் நின்று, அம்மா தாயே! தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்”என்று குரல் கொடுத்தார் கோபோ. அப்போது, அவ்வீட்டிலிருந்து வெளியே வந்த பெண், “ஐயா! சிறிது நேரம் காத்திருங்கள். குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று சொல்லி, குடத்துடன் விரைந்தார். நீண்ட நேரம் சென்று, அப்பெண், இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் மெல்ல நடந்து வந்தார். வீட்டிற்குள் சென்ற அவர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து துறவியிடம் நீட்டினார். தண்ணீர் கொண்டு வருவதற்கு இவ்வளவு நேரமா?” என்று கோபத்துடன் கேட்டார் துறவி. “ஐயா! மழை பெய்யாததால் இங்கே உள்ள கிணறுகளும், குளங்களும் வற்றிவிட்டன. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்தில்தான் தண்ணீர் உள்ளது. நாங்கள் எல்லாரும் நாள்தோறும் அவ்வளவு தொலைவு சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். நீங்கள் கேட்டபோது வீட்டில் தண்ணீர் இல்லை. அதனால்தான் அங்கே சென்று தண்ணீர் கொண்டு வந்தேன்” என்று பணிவுடன் சொன்னார் அப்பெண். கடும் வெயிலில் நடந்துவந்ததால் அப்பெண்ணின் உடல் வியர்வையால் நனைந்திருந்ததைக் கண்டார் துறவி. அந்நிலையைப் பார்த்தும், அவரது கோபம் தணிந்தது. “இந்த வெயிலில் ஐந்து கல் நடக்க வைத்து விட்டோமே’என்றும் அவர் வருந்தினார். அப்பெண் தந்த தண்ணீரைக் குடித்தார். அவர் உள்ளம் குளிர்ந்தது. “அம்மா! உங்கள் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களால் இந்த ஊர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் வாழப்போகின்றனர்!” என்றார் துறவி கோபோ. பின்னர் அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார். தியானம் கலைந்து எழுந்தார். தன் கையில் இருந்த தடியால் தரையில் தட்டினார். தரை பிளவுபட்டு நீரூற்று ஒன்று வேகமாக வெளியே வந்தது. “அம்மா! இந்த இனிமையான நீரூற்று என்றும் வற்றாது. நீங்களும் இந்த ஊர் மக்களும் வளமாக வாழ்வீர்கள்!” என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் துறவி கோபோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.