2016-10-04 17:06:00

இந்தோனேசியத் திருஅவை : மனித வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு


அக்.04,2016. இந்தோனேசியாவின் ஃபோளரஸ் தீவில், மனித வர்த்தகத்தின் ஆபத்தை எதிர்நோக்கும் இளவயதினர் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி தலத்திருஅவை.

மனித வர்த்தகர்கள், இளவயது பள்ளி மாணவர்களிடம், அதிக ஊதியம் என்ற பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்றும்,  இந்தப் போலி வாக்குறுதிகளில் இளவயது மாணவர்கள் மயங்கிவிடாமல் இருப்பதற்காக, ரூட்டெங் மறைமாவட்டம், விழிப்புணர்வு பயிற்சிப் பாசறைகளை நடத்தி வருகின்றது என்றும் அறிவித்தார், அம்மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர், அருள்பணி Marthen Jenarut.

ஃபோளரஸ் தீவில் இடம்பெறும் மனித வர்த்தகம் பற்றிப் பேசிய அருள்பணி Jenarut அவர்கள், இளம் சிறுமிகளை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, மனித வர்த்தகர்கள் முயற்சிக்கின்றர் என்று தெரிவித்தார்.

49 இலட்சம் மக்களைக் கொண்ட ஃபோளரஸ் தீவு மாநிலத்தில், ஏறக்குறைய இருபது விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில், 54 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.